Info (Photo Credit: @backiya28 X)

பிப்ரவரி 26, டெல்லி (Delhi News): நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகில் நுகர்வு கலாச்சாரம்  ஆண்டுக்கு ஆண்டு  அதிகரித்து வருகிறது.  கடந்த  10 ஆண்டுகளில்  தனிநபர் நுகர்வு மிகவும் அதிகரித்துள்ளது.  இது அதிக  கழிவுகள் உருவாகவழிவகுக்கிறது, அதிலும் குறிப்பாக மறுசுழற்சி கழிவுகள் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. அதேசமயம் கழிவு மேலாண்மை துறையின் வளர்ச்சி அதற்கு ஏற்றார் போல  வேகமாக இல்லை.

தெருக்கள், சாலைகள், சந்திப்புகள், ஆற்றங்கரைகள் மற்றும்  பல இடங்களில்  சட்ட விரோதமாகவும்  குப்பைகள் மறுசுழற்சி கழிவுகளோடு சேர்த்து கொட்டப்படுகின்றன.இதனால் பூமிக்கு உண்டாகும் பாதிப்பை  அறிவதற்குகூட பொதுமக்கள் தயாராக இல்லை எ‌ன்பதே உண்மை.

ஆனால் "மிகவும் பாதிக்கப்பட்ட சமூகமான  " முறை சாராத  குப்பை பொறுக்குபவர்களின்" பங்களிப்பு காரணமாகவே திடக்கழிவு  மேலாண்மை துறை   ஓரளவு தப்பிப்பிழைக்கிறது. கழிவு மேலாண்மையில் இவர்களின் பங்களிப்பு மகத்தானது. இவர்கள் செய்யும்  இந்த பொது சேவையின் காரணமாக அதிகம் பாதிக்கபடக்கூடிய சமூகமும் இவர்கள்தான்.  சம்பளம் வாங்காமல் இந்த பணியை செய்பவர்கள் இவர்கள்.  ஆங்கிலத்தில்  "இன்ஃபார்மல் வேஸ்ட் பிக்கர்ஸ் அல்லது ராக் பிக்கர்ஸ்" (Informal waste pickers/ rag pickers) என்று அழைக்கப்படுகின்றனர். குப்பை  உருவாக்கம் மற்றும் அதன் பாதிப்புகளை  பற்றி கவலைப்படாத பெரும்பான்மையான நுகர்வோர்களின் பிளாஸ்டிக் மற்றும் இதர மறுசுழற்சி குப்பைகளை, குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள  இவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்.

"குப்பை பொறுக்குபவர்கள்" உணவு, உடை மற்றும்  உறைவிடம்" போன்ற அடிப்படை வாழ்க்கை முறை கிடைக்காததால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் சமூக சமத்துவத்தில், கல்வியறிவில், ஆரோக்கியத்தில்  பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. "எங்கெங்கும் காண்போம் இறைவனை" என்பது போல், "எங்கும் காணலாம் இந்த உன்னத மனிதர்களை".

இந்தியாவில் ஆண்டுதோறும் உருவாகும் 62 மில்லியன் மெட்ரிக் டன் திடக்கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே 5.6 மில்லியன் மெட்ரிக் டன்-ஆக உள்ளது. இந்திய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) சமீபத்தில் இந்தியாவில் வருடாந்திர திடக்கழிவு உற்பத்தி 2030 க்குள் 165 மில்லியன் மெட்ரிக் டன்-ஆக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. மறுசுழற்சி குப்பைகளை கையாள்வதில் இந்த முறை சாராத  குப்பை பொறுக்குபவர்கள்  முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  வீதிகள், சாலைகள் மற்றும் குப்பை கொட்டும் இடங்களில் இருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிக்கும் பொறுப்பான பணியை செய்து வருகின்றனர். India Post GDS Recruitment 2025: அஞ்சல் துறையில் 21,413 காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?!

இவர்களின்  பணிகள் ஒவ்வொரு நாளும் கடினமானதாகவே தொடங்குகின்றன. மறுசுழற்சி குப்பை பொறுக்குபவர்களின் வாழ்க்கை எளிமையானதும் மற்றும் சவால் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. தெருக்கள்,சாலைகள் மற்றும்   பெரிய குப்பைக் கிடங்குகளில் இருந்து மறுசுழற்சி குப்பைகளை சேகரிப்பதிலிருந்து தொடங்குகிறது இவர்களது வாழ்க்கை.  நண்பகல் வரை உழைத்து, பிறகு சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி குப்பைகளை தங்கள் பட்டறிவின் அடிப்படையில் பிரித்தெடுக்கின்றனர். தரம் பிரித்து  பி‌ன்ன‌ர் மறுசுழற்சி குப்பைகளை வாங்கும் வியாபாரிகளிடம் ஒப்படைத்து, அதற்கான பணத்தை பெறுகின்றனர்.  அவ்வாறு பெறப்படும் சிறு தொகையை அன்றாட  குடும்ப செலவுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலும் நரிக்குறவர் சமுதாயத்தைசேர்ந்தவர்கள், இருளர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் கைவிடப்பட்ட தனிநபர்கள் இந்த மறுசுழற்சி குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மறுசுழற்சி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் அவர்கள் குறிப்பிடத்தக்க  பங்காற்றி வருகின்றனர். மேலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகளுக்கும் பெரும் பங்காற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முறைசாரா குப்பை சேகரிக்கும் மக்கள் கடுமையான சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் ‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’  தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வுகளின்படி, முறைசாரா குப்பை பொறுக்குபவர்களில் 48% பேர் மட்டுமே சொந்தமாக சிறு வீடுகளை வைத்திருக்கிறார்கள், 10% மக்கள்  தெருக்களில், 10% மக்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளிலும் வசிக்கின்றனர். குப்பை பொறுக்குபவர்கள் 82% மக்கள் தனிக்குடித்தனம் செய்பவர்களே. ஆண்களை விட பெண்களே (55% மேல்) இந்த மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த தொழிலில் ஈடுபடும்  மக்கள் 68 சதவீதம் பேர் கல்வி அறிவற்றவர்கள். இந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் கல்வி அறிவு நிலைகள் மிகவும் குறைவாக இருக்கின்றன.  குழந்தைகள் பெரும்பாலும் பள்ளி செல்லாமல் கல்வியை இழக்கிறார்கள்.  குழந்தைகளும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது கசப்பான உண்மை.  பலரும் பள்ளி செல்லாமல் வீடுகளிலேயே உள்ளனர்.

இவர்கள் தினமும் சராசரியாக 100 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள், பெரிய குப்பை கொட்டும் கிடங்குகளில் (Dump yard) இருந்து மறுசுழற்சி குப்பைகளை  சேகரிப்பவர்கள் சற்று அதிகம் சம்பாதிக்கிறார்கள். மறுசுழற்சி குப்பை  பொறுக்குபவர்கள் பெரும்பாலும்  வருமானம்  உறுதியற்ற தன்மையால் தினம் தினம் சிரமப்படுகிறார்கள். இதனாலேயே சுமார் 40% பேர் தங்கள் அடிப்படைதேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கியுள்ளனர்.  இது அவர்களது குடும்பத்தில் நிதி நிலைமை  மிக மோசமாக உள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது.

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகள் போன்ற அரசு வழங்கிய அத்தியாவசிய அடையாள ஆவணங்களை வைத்திருந்தாலும், 34% பேர் மட்டுமே பான் அட்டைகளை வைத்துள்ளனர். 32% பேர்  சாதி சான்றிதழ்களையும்,16% பேர்  நலத்திட்ட அட்டைகளையும் வைத்திருக்கிறார்கள்.  இவர்களில் 88% பேருக்கு அடிப்படையான அரசு நலத்திட்டங்களைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இவர்களின் பணி சூழல்கள் ஆபத்தானவை, பலரும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்து வருகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் அடிக்கடி  காயங்கள் மற்றும் நோய்களுக்கு ஆளாகிறார்கள் மற்றும் விபத்துகளையும் சந்திக்கின்றனர்.  மோசமான பணி சூழல்கள்  சுகாதார அபாயங்களை அதிகரிக்கின்றன. மழை நாட்களில்  வேலை செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.  இது ஏற்கனவே உள்ள ஆபத்தான நிதி நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

முறை சாராத  குப்பை பொறுக்குபவர்களின் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்  மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதை  வலியுறுத்தி தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் கடற்கரை சுற்றோட்டத் திட்டம் (Coastal Circularity Project) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  கடலோர மாவட்டங்களில் உள்ள முறைசாரா குப்பை  பொறுக்குபவர்களின் குடும்ப  உறுப்பினர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி  வருகின்றது.

அரசின் NAMASTE திட்டம் போன்ற திட்டங்களுடன் இணைந்து, குப்பை பொறுக்குபவர்களின் பாதுகாப்பு, வருமானத்தை உயர்த்துதல் மற்றும்  அவர்களுக்கான உரிமைகள் அடங்கிய கண்ணியத்தை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முறைசாரா குப்பை பொறுக்குபவர்கள் சவால்களை எதிர்கொள்ள விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (The Extended Producer Responsibility-EPR) விதிகளில் சேர்ப்பது அவசியம்.  அவர்கள் வளர்ந்து வரும் சுற்றுவட்ட பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதி  செய்ய வேண்டும். இவர்களை மறுசுழற்சி பாதுகாவலர்கள் என்று அடையாளப்படுத்தி, Fast-moving consumer goods (FMCG) மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மூலம் நிதி உதவி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சி வழங்குவதன் மூலமும் இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், நமது அரசுடன் இணைந்து பணியாற்றினால் ஒரு மாற்றத்தை இந்த அற்புத மனிதர்களுக்கு நம்மால் உருவாக்க முடியும்.