ARTICLE AD BOX

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்காக ரசிகர்கள் எப்போதும் மிக ஆர்வமாக காத்திருப்பார்கள்.
ஏற்கனவே, இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால், இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுமே போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2.30 க்கு போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு டாஸ் போடப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி பந்துவீச உள்ளது.
பாகிஸ்தான் அணியில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஃபகார் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக இமாம் உள்ளே வந்துள்ளார்.
இந்திய அணி:
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணி:
கேப்டன் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியில், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம், சவுத் ஷகீல், சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வலுக்கும் எதிர்பார்ப்பு – வெற்றி கனி யாருக்கு?
இந்த போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அரையிறுதிக்கான தனது வெற்றியின் பலத்தை வெளிப்படுத்தும். அதே நேரத்தில், இது பாகிஸ்தானுக்கு வெற்றி அல்லது செத்து மடிங்கிற போட்டியாக இருக்கும். மேலும், இன்றைய போட்டியில் வென்று கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்
இந்தியா – பாகிஸ்தான் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ள 135 ஒருநாள் போட்டிகளில் 73 போட்டிகளில் பாகிஸ்தான் வென்றுள்ளது. இந்திய அணி 53 போட்டிகளில் வென்றுள்ளது. 5 முறை சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியுள்ளன. இதில் 3 முறை பாகிஸ்தானும், 2 முறை இந்தியாவும் வென்றுள்ளது.