ARTICLE AD BOX
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 241 ரன்களை எடுத்தது. 242 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியில், சுப்மன் கில் 46 ரன்களும், ஸ்ரேயாஷ் 56 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் கடைசி வரை களத்தில் இருந்த விராட் கோலி சதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடத்தும் விராட் அசத்தினார். இதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இந்திய கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது.
போட்டி முடிந்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் முகம்மது ரிஸ்வான், “முதலில் விராட் கோலியைப் பற்றிப் பேச வேண்டும். அவரது கடின உழைப்பைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்க வேண்டும். உலகம் அவர் ஃபார்மில் இல்லையென்று சொல்கிறது. ஆனால் அவர் பெரிய போட்டிகளில் விளையாடி எளிதாக ரன்களை அடிக்கிறார்.
அப்ரார் எங்களுக்கு விக்கெட் எடுத்துக் கொடுத்தார். ஆனால், கோலியும் கில்லும் எங்களிடமிருந்து ஆட்டத்தைக் கொண்டு சென்றுவிட்டனர். நாங்கள் எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டும். இந்தப்போட்டியில் நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம். வரும் போட்டிகளில் இதில் கவனம் செலுத்துவோமென நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாகத் தோற்று வருகிறோம்
பாகிஸ்தானின் தோல்வி குறித்து வாசிம் அக்ரம் கூறுகையில், “கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. ஒரே வீரர்களுடன் நாம் பல ஆண்டுகளாக தோற்று வருகிறோம். பயமற்று கிரிக்கெட் விளையாடும் வீரர்களை அணிக்குள் கொண்டுவர வேண்டும். புதிய வீரர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு தயாராகுங்கள்.
ஒரு அணிக்கு கேப்டன்தான் எல்லாம். எந்த மேட்ச் வின்னர் தனக்குத் தேவை என்பது அவருக்கே தெரியாவிட்டால் அணி எப்படி வெற்றி பெறும். சேஸிங்கில் இந்திய அணி 15 ஆவது ஓவரை ஆடிக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் வீரர்கள் போட்டியிலிருந்து முற்றிலுமாக விலகிச்சென்று விட்டனர். ரசிகர்கள் மைதானத்தில் இருந்து இத்தனை வேகமாக வெளியேறியதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை” எனத் தெரிவித்தார்.
குழந்தைகளை குறைசொல்ல முடியாது
சோயிப் அக்தர் தனது எக்ஸ் தளத்தில் போட்டியின் முடிவு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நாம் குழந்தைகளை (பாக் வீரர்கள்) குறைசொல்ல முடியாது. வீரர்களும் அணி நிர்வாகத்தைப் போலவே இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாகிஸ்தான் அணியிடம் ரோகித், விராட், கில் போன்ற திறமையான வீரர்கள் இல்லை” எனத் தெரிவித்தார்.
சஞ்சய் மஞ்ரேக்கர் இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பாக கூறுகையில், “இப்போதெல்லாம் நாம் பாகிஸ்தானுடன் விளையாடும் ஒவ்வொரு முறையும், இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சியைக் காண்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் கூறுகையில், “ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை விட திறமை, உடற்தகுதி, அழுத்தத்தைத் தாங்கும் திறன் ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.