ARTICLE AD BOX
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்னதாக விராட் கோலி காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அது பெரிதாக இருக்காது என்றாலும் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விராட் கோலி சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டார். மற்ற இந்திய வீரர்கள் வருவதற்கு முன் மைதானத்திற்கு விராட் கோலி வந்துவிட்டார்.

சுமார் மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்த விராட் கோலி ஐக்கிய அரபு அமீரக அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களை வரவழைத்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் அவர் மைதானத்திற்கு உள்ளே சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்தார். அப்போது அவரது கணுக்காலில் வலி ஏற்பட்டது. அதற்கான முதல் உதவி செய்ய வேண்டி "ஐஸ் பேக்" உபகரணத்தை பொருத்திக்கொண்டு இருந்தார்.
அதனால் அவரால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முழு உடல் தகுதியுடன் பங்கேற்க முடியுமா? குறிப்பாக காலில் வீக்கம் அல்லது வலி இருப்பதால் ரன் ஓட முடியுமா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் விராட் கோலி அதன் பின்னரும் வலைப்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். பிற வீரர்களுடன் இயல்பாகவே பேசிக் கொண்டிருந்தார். எனவே அவரது காயம் பெரிதாக இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
IND vs PAK: புதிய சிக்கலில் ரிஷப் பண்ட்.. பாகிஸ்தான் போட்டியில் களமிறக்க நினைத்தாலும் வாய்ப்பு இல்லை
விராட் கோலியின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் மோசமாக விளையாடி வந்தார். கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடர்களிலும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே அவரது பேட்டிங் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனவே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் பெரிய அளவில் ரன் குவிப்பாரா? என்று எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. ஃபார்மை மீட்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார் விராட் கோலி.