ARTICLE AD BOX
துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் விளையாடினால் அது மிகப்பெரிய வருமானத்தை அதை சார்ந்த அனைவருக்கும் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் இந்தியா பாகிஸ்தான் போட்டியை வைத்துதான் ஒட்டுமொத்த ஐசிசி தொடருமே இயங்குகிறது.
இதனால் தான் எப்போதும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறுவது போல் ஐசிசி அட்டவணையை அமைக்கும். ஏனென்றால் இந்த போட்டியை சுமார் 30 கோடி பார்வையாளர்கள் பார்ப்பார்கள். இதன் மூலம் பெரிய அளவு வருமானம் கிடைக்கும்.

கடைசியாக இந்தியாவும் பாகிஸ்தானும் 2023 50 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதின. இதில் தொலைக்காட்சியில் மட்டும் 17 கோடியே 30 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப் மூலம் 22 கோடியே 50 லட்சம் பேர் கண்டு களித்து இருக்கிறார்கள். இதன் மூலம் இது அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஒரு நாள் போட்டி என்ற பெயரை பெற்றது.
இந்த 50 உலகக் கோப்பை போட்டிக்கு பத்து வினாடிக்கு 30 லட்சம் ரூபாயை விளம்பர கட்டணமாக ஸ்டார் நிறுவனம் வசூலித்தது. இந்த வகையில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தற்போது 10 வினாடிக்கு 50 லட்சம் ரூபாயை ஸ்டார் நிறுவனம் விளம்பர கட்டணமாக வசூலித்திருக்கிறது. 10 வினாடி விளம்பரம் கிடைப்பதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வாங்கி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஒவர் இடையிலும், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் போட்டி நடைபெறும் 100 ஓவருக்குமே விளம்பரம் இருக்கும். அப்படி என்றால் ஒரு பத்து வினாடிக்கு 50 லட்சம் என்றால், மொத்த விளம்பரம் தொகை எவ்வளவு வரும் என்பதை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்திய பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிகள் மூலம் 10,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும் என FICCI தெரிவித்துள்ளது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக ஒரு டிக்கெட்டின் விலை ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அதிகபட்சமாக துபாயில் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.