ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை மூன்று ஆட்டங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி துபாயில் நாளை நடைபெற உள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் சூப்பர் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட முடியும் என்பதால் இந்தியா அணி வெற்றிவாகை சூட ரெடியாக உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இன்னும் சரியாக விளையாடவில்லை. அதிலும் குறிப்பாக விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி எப்போதும் சிறப்பாக விளையாடும் நிலையில் நாளைய ஆட்டத்தில் அசத்த காத்திருக்கிறார். பாகிஸ்தான் பவுலர்களை சமாளிக்க புது வியூகம் வகுத்த விராட் கோலி துபாய் பிட்ச்சில் தனியாக சிறப்பு பயிற்சி எடுத்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடியை எதிர்கொள்வதற்காக அவரை போலவே இடது கையில் பந்துவீசும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த வீரரை வரவழைத்து கோலி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
மேலும் விராட் கோலி 3 மணி நேரம் தனியாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதவிர தொடர்ந்து ஸ்பின் பவுலிங்கில் அவர் அவுட்டாகி வருவதால் அதை சமாளிக்க தயாராகும் வகையில் ஸ்பின் பந்துகளையும் அதிகம் எதிர்கொண்டு பயிற்சி எடுத்துள்ளார் விராட் கோலி. பாகிஸ்தானுக்கு எதிராக 16 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 3 சதங்கள், 2 அரைசதங்களுடன் 521 ரன்கள் குவித்துள்ளார். இதனால் நாளைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு கோலி பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி ஜொலிப்பாரா? அல்லது சொதப்புவரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.