India vs Pakistan Champions Trophy 2025:  சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் போட்டி இன்று துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தான் பேட்டிங்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான வாய்ப்பு ஆகும். ஏனென்றால், முதல் போட்டியில் நியூசிலாந்துடன் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி இந்த போட்டியிலும் தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உண்டாகும்.

வெற்றிக்கு மல்லுகட்டு:

அதேசமயம் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குச் செல்வதை உறுதி செய்யும். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினால் அடுத்த சுற்றுக்குச் செல்ல நியூசிலாந்துடனான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஏற்படும். இதனால், இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும்.

ப்ளேயிங் லெவன்:

இரு நாட்டு பிரச்சினை காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டும் இரு அணியும் மோதிக் கொள்கின்றன. முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக், பாபர் அசாம், செளத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் அகா, தையப் தாஹீர். குஷ்தீல் ஷா, ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஷ் ராஃப், அப்ரர் அகமது களமிறங்குகின்றனர்.

கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் களமிறங்கியுள்ளனர்.

வலுவான இலக்கு?

இந்த மைதானத்தில் வங்கதேசத்துடன் முதல் போட்டியில் மோதிய இந்திய அணி சேசிங் செய்து அசத்தியது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருப்பதால் வலுவான இலக்கை நிர்ணயிக்க பாகிஸ்தான் முனைப்பு காட்டும். பும்ரா இல்லாதது அவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முகமது ஷமி தனது வேகத்தால் பாகிஸ்தானை அச்சுறுத்துவார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர். கடந்த போட்டியில் கடைசி கட்டத்தில் அசத்திய குஷ்தில்ஷாவும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். மேலும், இமாம் உல் ஹக், சவுத் ஷகீல், சல்மான் அகாவும் சிறப்பாக ஆட வேண்டியது அவர்களுக்கு அவசியம் ஆகும்.

ஜொலிப்பாரா கோலி?

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை சுப்மன்கில் சிறப்பாக ஆடி வருகிறார். அவரது தொடர்ச்சியான அசத்தல் பேட்டிங் இன்றைய போட்டியிலும் தொடர வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் ரோகித்சர்மா தனது அதிரடியை நீண்ட நேரம் காட்டினால் பாகிஸ்தானுக்கு நிச்சயம் நெருக்கடி ஆகும்.

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பது விராட் கோலியின் பேட்டிங்கே ஆகும். அவர் தனது ஃபார்முக்கு திரும்பி சிறப்பான இன்னிங்சை ஆடினால் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றி உறுதியாகும். இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் முகமது ஷமியுடன் இணைந்து ஹர்ஷித் ராணா, பாண்ட்யா, ஜடேஜா, அக்ஷர்படேல், குல்தீப் யாதவ் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும்.

பந்துவீச்சு பலம்:

பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சு நட்சத்திரமாக ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஷ் ராஃப் உள்ளனர். துபாய் மைதானத்தில் இந்திய அணியைக் காட்டிலும் அதிக போட்டிகளில் ஆடியது பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.