ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும் ,பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் கில், பேசிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம்."இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடும் போட்டிகளுக்கு மிகப் பெரிய வரலாறு இருக்கின்றது."
"இந்த இரண்டு அணிகளும் விளையாடும் போது அது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த போட்டிகளை பார்க்கும்போது ரசிகர்களும் என்ஜாய் செய்வார்கள். அதிக மக்களால் இந்த போட்டி பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதற்கு ஓவர் ஹைப் அல்லது ஹைப்பே இல்லை என்று சொல்ல நாம் யார்?"

"நாங்கள் கிரிக்கெட் விளையாட தான் அங்கு செல்கின்றோம். எங்கள் நாட்டுக்காக நாங்கள் விளையாடி வெற்றி பெற தான் முயற்சி செய்வோம். முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவினாலும், அவர்களை பலம் குன்றிய அணியாக என்றுமே நாங்கள் நினைக்க மாட்டோம். நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானது."
"கடந்த போட்டியில் துபாயில் பனிப்பொழிவு என்பது இல்லை. பனிப்பொழிவு இல்லாத பட்சத்தில், இரண்டாவதாக பேட்டிங் செய்ய கடினமாக இருக்கிறது. சிங்கிள்ஸ் எடுக்கவே கஷ்டமாக இருக்கிறது. எனவே களத்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களை வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. பனிப்பொழிவு இல்லாததால் டாசும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நினைக்கின்றேன்."
"ஆனால் இது போன்ற பெரிய போட்டியில் பனிப்பொழிவு இல்லாத பட்சத்தில்,இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்படும். எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள். துணை கேப்டன் பதவி வந்ததால் ஏதும் பெரியதாக மாறவில்லை. நான் களத்தில் பேட்டிங் செய்யும்போது நான் ஒரு பேட்ஸ்மேன் ஆக தான் என்னை நினைத்துக் கொள்வேன். அதுதான் என்னிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும்" என்று கில் தெரிவித்துள்ளார்.