ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புக் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்கள் இருவரும் கூடுதல் ஸ்பின்னர்களாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றனர்.
அவர்களில் வருண் சக்கரவர்த்திக்கு முதல் போட்டியில் இருந்தே நிச்சயமாக பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூட வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

ஆனாலும், இந்திய அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூன்று ஸ்பின்னர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இவர்கள் மூவரும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், அவர்களை நீக்குவது அணியின் சமநிலையைப் பாதிக்கலாம் என்ற அச்சமும் உள்ளது. அதே சமயம், இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால், அணியின் பிளேயிங் லெவனில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கலாம் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஒரு மேட்ச் கூட ஜெயிக்காத பாகிஸ்தானுக்கு பெரிய பரிசுத் தொகை.. சாம்பியன்ஸ் டிராபியின் விதி என்ன?
அந்த வகையில், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளித்துவிட்டு அவரைப் போன்ற ஆல்ரவுண்டராக இருக்கும் வாஷிங்டன் சுந்தரையும், குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளித்துவிட்டு அவரைப் போன்ற முழு நேர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியையும் பிளேயிங் லெவனில் சேர்க்கலாம் எனச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் மூலம், அவர்களுக்குப் போட்டிப் பயிற்சி கிடைக்கும். ஒருவேளை, அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியின்போது ஏதேனும் ஒரு முக்கிய வீரருக்குக் காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்களாக வருண் அல்லது சுந்தர் அணியில் விளையாடுவதற்கு அது உதவியாகவும் இருக்கும். எனினும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இது அமையும்.