ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டி மழையால் தடையானால் ரிசர்வ் டே மார்ச் 10ஆம் தேதி அன்று நடைபெறும்.
ஆனால் துபாயில் தற்போது மழைக்கு வாய்ப்பே இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. இந்த தருணத்தில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

வரும் ஏப்ரல் மாதம் வந்தால் ரோகித் சர்மா 38 வயதை நிறைவு செய்துவிடுவார். ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்கும் உத்வேகத்தில் விளையாடி வருகிறார். இதனால் ரோகித் சர்மாவால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. மேலும் ரோகித் சர்மாவின் உடல் தகுதியும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பிறகு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஒரு ஆண்டு வரை ரோகித் சர்மா விளையாட கூடும் என தெரிகிறது.
வெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட முடிவெடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றாலும், வெல்லாவிட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது உறுதி என்ற தகவல் மட்டும் வெளியாகிறது.
ஏற்கனவே டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இனி சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என முடிவெடுத்தார்கள். இதே போல் ஒரு முடிவை சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிறகும் ரோகித் சர்மா, ஜடேஜா போன்றோர் முடிவெடுக்கலாம். விராட் கோலிக்கும் 36 வயது தான் ஆகிறது. ஆனால் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதால் அவரால் 2027ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை வரை விளையாட முடியும் என தெரிகிறது. ரோகித் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றால் ஒரு சகாப்தம் இந்திய கிரிக்கெட்டில் முடிவுக்கு வந்துவிடும்.