இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கோலி விளையாடுவாரா? மாட்டாரா?

இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் இந்த போட்டி நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கவில்லை. அவர் காயம் காரணமாக களமிறங்காதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் களமிறங்குவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

நாளை நடக்கும் இரண்டாவது போட்டியில் கோலி களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்காத கோலயியின் காயம் குணம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக, அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறியதாவது, கோலி முழு உடற்தகுதியுடன் உள்ளார். அவர் எங்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார்.

கம்பேக் தருவாரா கிங் கோலி?

கடந்தாண்டு நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மோசமானதாக இருந்தது. அந்த தொடருக்கு பிறகு விராட் கோலி களமிறங்கும் முதல் ஒருநாள் தொடர் இதுவே ஆகும். பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்த விராட் கோலி அதன் பிறகு தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பினார். ரஞ்சி கிரிக்கெட்டிலும் டெல்லி அணிக்காக ஆடிய கோலி கிளீன் போல்டானார்.

அடுத்து சாம்பியன்ஸ் டிராபி நடக்க உள்ள நிலையில், விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள இந்த ஒருநாள் போட்டிகள் மூலம் ஃபார்முக்கு திரும்புவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவரது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். விராட் கோலி மட்டுமின்றி கேப்டன் ரோகித் சர்மாவும் பேட்டிங்கில் சிறப்பாக ஆட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டியிலும் ரோகித் மற்றும் விராட் கோலி சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.