இமாலய இலக்கை கொடுத்த இந்திய அணி

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5-வது மற்றும் இறுதி டி20 போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்ஸன் மற்றும் அபிஷேக் ஷர்மா பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர். 7 பந்துகளில் 16 ரன்கள் அடித்த நிலையில் சஞ்சு சாம்ஸன் அவுட்டாக, அடுத்த திலக் வர்மா களமிறங்கினார்.

மறுபுறம், இங்கிலாந்து பவுலர்களை பிரித்தெடுத்த அபிஷேக் ஷர்மா, 17 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும் கொஞ்சம் அதிரடி காட்டிய நிலையில், 15 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சூர்யகுமார் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே, பந்துகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.

மறுமுனையில், சூர்யகுமாரை தொடர்ந்து களமிறங்கியிருந்த ஷிவம் தூபே அவரது பங்கிற்கு இங்கிலாந்து பவுலர்களை பின்னி எடுத்து, 13 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா 9 ரன்களிலும், ரிங்கு சிங் 9 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

மறுபுறம், தொடர்ந்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா, 54 பந்துகளில், 13 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிந்தனர். இறுதியில், 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில், அதிகபட்சமாக ப்ரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பவுலிங்கிலும் அசத்திய இந்திய வீரர்கள்

இதைத் தொடர்ந்து, 248 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. ஒரு முனையில் சால்ட் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்நிலையில், 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்த சால்ட் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் வரிசையாக பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணி, 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய தரப்பில், அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் தூபே மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய அபிஷேக் ஷர்மா தேர்வானார்.

தொடர் நாயகனாக, பவுலிங்கில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த இமாலய வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, 4 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.