ARTICLE AD BOX
துபாய்: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவு போட்டியில், அக்சர் பட்டேல் ஹாட்ரிக் சாதனை வாய்ப்பை கேப்டன் ரோஹித் சர்மா தவறவிட்டார். ரோஹித் சர்மா கைகளுக்கு வந்த கேட்சை நழுவ விட்டதால், அக்சர் பட்டேலின் ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது. இது பற்றி அக்சர் மனம் திறந்து பேசியுள்ளார்.
தான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி விட்டதாக நினைத்து கொண்டாடச் சென்றதாகவும், ஆனால் ரோஹித் செய்ததை பார்த்து அமைதியாக திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார். இந்தப் போட்டியில் அக்சர் பட்டேல் ஒன்பதாவது ஓவரை வீசினார். அப்போது அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் தன்ஷித் ஹாசன் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அதற்கு அடுத்த பந்திலேயே முஷ்பிகுர் ரஹீம் தான் சந்தித்த முதல் பந்திலேயே மீண்டும் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்து மூன்றாவது பந்தில் ஜாகர் அலி கொடுத்த கேட்சை ஸ்லிப் திசையில் நின்று இருந்த ரோஹித் சர்மா நழுவ விட்டார். அது மிக எளிதான கேட்ச் வாய்ப்பு ஆகும்.
இது பற்றி பேசிய அக்சர் பட்டேல், "நிறைய நடந்து விட்டது. ரன்ஷித் ஹாசன் விக்கெட் முதலில் அவுட்டா என எனக்கு தெரியவில்லை. ஆனால் கே.எல். ராகுல் தான் அவுட் கேட்டார். அம்பயர் உடனடியாக கொடுத்து விட்டார். இரண்டாவது விக்கெட்டையும் நான் அடுத்த பந்திலேயே வீழ்த்தினேன். மூன்றாவது எட்ஜ் ஆகிவிட்டது என தெரிந்தவுடன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதாகவே நான் நினைத்தேன்."
"அது நிறைய சம்பவங்கள் நடந்த ஓவராக இருந்தது. நான் அப்போது ஹாட்ரிக்காக கொண்டாட தொடங்கினேன். ஆனால் அதன் பின் ரோஹித் சர்மா கேட்சை நழுவ விட்டதை பார்த்தேன். அதன் பின்னால் அதற்கு பெரிதாக எதிர்வினையை வெளிப்படுத்தவில்லை. மீண்டும் பந்து வீச சென்று விட்டேன். இது ஆட்டத்தின் ஒரு பகுதி தான்" என்றார் அக்சர் பட்டேல்.
இதன் மூலம் ரோஹித் சர்மா கேட்சை நழுவ விட்டது அக்சர் பட்டேலின் மனதை பாதித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனினும், கேப்டனே இந்த செயலை செய்ததால் வேறு எதுவும் செய்ய முடியாமல் அக்சர் பட்டேல் அமைதி காத்து இருக்கிறார். போட்டி முடிந்தவுடன் கேப்டன் ரோஹித் சர்மா தனது செயலை பற்றி தானே விமர்சித்து பேசினார். மேலும் அக்சர் பட்டேலை இரவு உணவுக்கு வெளியே அழைத்துச் சென்று அவரை சமாதானம் செய்யப் போவதாகவும் கூறி இருக்கிறார்.