ARTICLE AD BOX
துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ள நிலையில், அனைவரும் டிராவிஸ் ஹெட்டை தான் உற்று நோக்கி வருகிறார்கள். அவரே இதுவரை உலகக் கோப்பை போன்ற சர்வதேச தொடர்களில், நாக்-அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு வில்லனாக இருந்திருக்கிறார்.
2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை ஆகியவற்றில் அவரே இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்தார். சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் டிராவிஸ் ஹெட் இரண்டு சதங்களை அடித்து இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். எனவே அவரை வீழ்த்துவது இந்திய அணியின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணி அதை செய்வதற்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. அதை சரியாக செயல்படுத்தினாலே அவரை வீழ்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. அது என்ன மூன்று வாய்ப்புகள் என்று இங்கே பார்க்கலாம்.
இந்திய அணி முதலில் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து பந்துவீசத் தொடங்க வேண்டும். அப்போது துவக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்கி இருப்பார். அவருக்கு வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் வீசினால் ஒரு சிக்கல் உள்ளது. ரவுண்ட்-தி- விக்கெட் முறையில் அந்த வலது கை பந்துவீச்சாளர் பந்து வீசினால் அவர் ஆட்டம் இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதுவரை 2022 முதல் டிராவிஸ் ஹெட் பவர் பிளே ஓவர்களில் ரவுண்ட்-தி-விக்கெட் பந்துவீச்சுக்கு எதிராக 19 இன்னிங்ஸ்களில் எட்டு முறை ஆட்டம் இழந்திருக்கிறார். அதில் அவரது சராசரி 22.25 என்பதாகவே உள்ளது. ஓவர்-தி-விக்கெட் முறையில் வீசும் போது 21 இன்னிங்ஸ்களில் ஐந்து முறை மட்டுமே ஆட்டம் இழந்து இருக்கிறார். அதில் அவரது சராசரி 56 ஆக உள்ளது. எனவே முகமது ஷமி இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட்டுக்கு ரவுண்ட்-தி- விக்கெட்டில் வீச வேண்டும்.
ஒருவேளை அதில் அவர் தப்பினால், அடுத்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்து வீச வேண்டும். தொடர்ந்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பந்து வீசும் போது டிராவிஸ் ஹெட் சிக்குவார். ஏனெனில், காலை நகர்த்தி ஆடுவதில் அவருக்கு சிரமம் உள்ளது. இந்த இரண்டிலும் தப்பினால் அவர் அடுத்து வருண் சக்கரவர்த்தியிடம் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் அவர் இதுவரை ஐபிஎல் தொடரிலும், சர்வதேச போட்டிகளிலும் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக விளையாடியதில்லை. வருண் பந்து வீசுவது அன்ஆர்தடக்ஸ் (unorthodox) முறை ஆகும். அது போன்று பந்து வீசுகையில் புதிதாக அவரை சந்திக்கும் பேட்ஸ்மேன்கள் நிச்சயமாக திணறுவார்கள்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்து டி20 தொடரே அதற்கு மிகச் சிறந்த உதாரணம். நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த மூன்று வலையில் நிச்சயமாக டிராவிஸ் ஹெட் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அவரை விரைவாக வீழ்த்தினால் இந்திய அணி மனதளவில் தன்னம்பிக்கை பெறும்.