ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 265 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. சேஸிங்கின் போது 4 விக்கெட் வீழ்ந்த நிலையில் கே.எல். ராகுல் செய்ய பேட்டிங் வந்தார்.
அவர் இதற்கு முன் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடியது போல ஆமை வேக ஆட்டத்தை ஆடுவாரோ? என்ற அச்சம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆஸ்திரேலிய அணியும் கூட அவரை ஒரு பெரிய அச்சுறுத்தலாக நினைக்கவில்லை. ஆனால், கடைசி வரை நின்று விராட் கோலி விட்டுச் சென்ற இடத்திலிருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் ராகுல்.

கடைசியாக சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை முடித்தார். மேலும் இந்திய அணியில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய வீரராகவும் மாறி ஆச்சரியத்தை அளித்தார். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது கே.எல். ராகுல் தான் அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். அவர் 66 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால் அந்த இறுதிப் போட்டியில் கே.எல். ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 61.68 என்பதாக இருந்தது. அதாவது 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அதற்கு ராகுலின் ஆமை வேக ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கும் ராகுலின் மோசமான பேட்டிங் காரணமாக இருந்தது.
அதே ஆஸ்திரேலிய அணியை சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சந்தித்த நிலையில், அப்போது போலவே கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து ஆடினர். விராட் கோலி 84 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்த போது இந்திய அணி வெற்றியை நெருங்கி இருந்தது. அதற்கு முன்பே ராகுல் தனது பேட்டிங்கில் வேகத்தை அதிகரித்து விட்டார். அதனால் ரசிகர்கள் நிம்மதியுடன் இருந்தனர்.
IND vs AUS: துபாயில் ஆடுவதை பற்றி இனிமே பேசுவியா.. கிழித்து தொங்கவிட்ட கம்பீர்.. பொளேர் பேட்டி
கோலி ஆட்டமிழந்த போது இந்திய அணி ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுத்தாலே வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. ஹர்திக் பாண்டியா ஒரு பக்கம் சிக்ஸர்களைப் பறக்க விட்டார். ஆனால் இந்திய அணி வெற்றி பெறும் முன்பே 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் பாண்டியா.
மறுபுறம் ராகுல் பொறுப்புடன் விளையாடி ஆட்டம் இழக்காமல் கடைசி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 123.53 என்பதாக இருந்தது.
2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இருந்த அவரது ஸ்ட்ரைக் ரேட்டை விட இரண்டு மடங்கு அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் தற்போது ஆடியிருந்தார். இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கே.எல். ராகுலை பாராட்டி வருகின்றனர். இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.