ARTICLE AD BOX
துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா ஒரு வகையில் முக்கிய காரணமாக இருந்தார். விராட் கோலி 84 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிக்கு அருகே இருந்தது.
ஆனாலும், ஆஸ்திரேலிய அணியினர் நம்பிக்கையை இழக்காமல் இருந்தனர். 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்திய அணி, அப்போது 36 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தனர். இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அப்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் 44 மற்றும் 46-வது ஓவரை வீசினார். அந்த ஓவர்களில் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா மிகவும் கவனமாக ஆடினார்கள். ஆனால் 45-வது ஓவரை தன்வீர் சங்கா வீசினார். அதில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். அடுத்து ஆடம் ஜாம்பா வீசிய 47-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அந்த ஓவரிலேயே இந்திய அணி 15 ரன்கள் சேர்த்தது.
அத்துடன் ஆஸ்திரேலியாவின் அனைத்து நம்பிக்கைகளும் உடைந்து போனது. அதுவரை இந்திய அணிக்கு அழுத்தம் இருந்தது, ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா அடித்த மூன்று சிக்ஸர்களால் கடைசி மூன்று ஓவர்களில் 12 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையை இந்திய அணி எட்டியது.
IND vs AUS: கடைசி நிமிட ட்விஸ்ட்.. ஏமாந்த ஆஸ்திரேலியா.. சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு சென்ற இந்தியா
ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து 48-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். ஆனால் அப்போது இந்திய அணி வெற்றியை நெருங்கி இருந்தது. ஏழு ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. இதை அடுத்து 48.1-வது ஓவரில் கே.எல். ராகுல் ஒரு சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கே.எல். ராகுல் நிதானமாக ஆடினாலும், இடையே ஹர்திக் பாண்டியா அடித்த அந்த மூன்று சிக்ஸர்கள் ஆஸ்திரேலிய அணியின் கடைசி நம்பிக்கையை தகர்த்தது. இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.