ARTICLE AD BOX
துபாய்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய பின், இந்திய அணி மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக பதிலளித்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டிக்கு பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார். அதில் இந்திய அணிக்கு துபாய் மைதானம் சாதகமாக இருக்கிறதா, ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட பேட்டிங் மீதான விமர்சனம், ஐந்து ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்தது என வரிசையாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நெத்தியடியாக பதிலளித்து விமர்சகர்களின் வாயை அடைத்தார் கவுதம் கம்பீர்.

முதலில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது சாதகமான விஷயம் என்று வெளிவரும் விமர்சனங்களை பற்றி கம்பீரிடம் கேட்டபோது, "இந்திய அணி துபாயில் ஆடுவதால் எந்த விதமான சாதகமும் இல்லை. எப்படி மற்ற அணிகளுக்கு இது பொதுவான மைதானமோ அதேபோல எங்களுக்கும் இது பொதுவான மைதானம் தான். அதாவது சொந்த மைதானம் அல்ல. நாங்கள் இதுவரை துபாய் மைதானத்தில் ஒருமுறை கூட பயிற்சி செய்யவில்லை. நாங்கள் இங்கே இருக்கும் ஐசிசி கிரிக்கெட் அகாடமியில்தான் பயிற்சி செய்கிறோம். ஆனால் சிலர் குழந்தையின் தொட்டிலை ஆட்டுவதைப் போல இடைவிடாமல் இதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள்" என்று விமர்சனம் செய்பவர்களை சாடினார்.
அடுத்து ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பது பற்றி கேள்வி எழுப்பிய போது, "அவர் அதிரடியாக ஆடி மற்ற பேட்ஸ்மேன்கள் எப்படி ஆட வேண்டும் என்பதற்கான ஒரு அடித்தளத்தை அமைக்கிறார். கேப்டன் எப்படி ஆடுகிறாரோ மற்றவர்களும் அதை பின்பற்றுவார்கள்" என்றார் கவுதம் கம்பீர்.
மாபெரும் வரலாறு படைத்த இந்திய கேப்டன்.. உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத சாதனையை செய்த ரோஹித்
இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள் இருப்பது சரியா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து வெற்றி பெற்று இருக்கிறது. எனினும் இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், "இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ஐந்து ஸ்பின்னர்களில் மூவர் தேர்ந்த ஆல்ரவுண்டர்கள். அவர்கள் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நாங்கள் அணிக்கு எது முக்கியம் என்பதை பற்றி மட்டும் தான் பார்ப்போம்" என்றார் கவுதம் கம்பீர். இந்திய அணி அடுத்ததாக மார்ச் 9 அன்று நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.