ARTICLE AD BOX
Ilayaraja: சிம்பொனி மேடையில் தமிழ் பாட்டு.. கெத்து காட்டிய இளையராஜா.. டிரெண்டாகும் மாஸ் வீடியோ
லண்டன்: இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என பல பட்ட பெயர்களால் அழைக்கப்படும் இளையராஜா நேற்று அதாவது மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் என பல இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் சிம்பொனி இசை அரங்கேற்றிய மேடையில் அவர் இசையமைத்த தமிழ் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை பாடியுள்ளார்.
1500 படங்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜா லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியான பின்னர் அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் எம்.பி, திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இளையராஜாவை நேரடியாக சந்தித்து, வாழ்த்து கூறினார்கள். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது.
சிம்பொனி: இப்படியான நிலையில், இசைஞானி இளையராஜாவுக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்ய சென்னையில் இருந்து இசைஞானி புறப்பட்டுச் சென்றதில் இருந்து அனைவருக்கும் அவரது சிம்பொனி மீது கவனம் அதிகரித்தது. பல இசைஞானியின் தீவிர ரசிகர்கள், லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். அதேபோல், லண்டனில் இருக்கும் அவரது தீவிர ரசிகர்கள் அவரது சிம்பொனிக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள்.

பாடல்: இப்படியான நிலையில், இசைஞானியின் சிம்பொனியை நேரில் பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர், அங்கு அவர் எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இளையராஜா சிம்பொனி மேடையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அதாவது பாக்யராஜ் இயக்கி நடித்த படம் புதிய வார்ப்புகள். 1979 ஆம் ஆண்டு வெளியான அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் இதயம் போகுதே. கண்ணதாசன் எழுதி, இளையராஜா இசையமைப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாடல் இதயம் போகுதே பாடல். இந்த பாடலை இளையராஜா சிம்பொனி மேடையில் பாட, அதனை வீடியோ எடுத்த ரசிகை ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வீடியோ: மேலும் அந்த ரசிகை அந்த வீடியோவுக்கு, " இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்தின் போது யாரும் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தீர்கள். ஆனாலும் என்னால் இளையராஜா பாடல் பாடுவதை பார்த்துக் கொண்டு, நீங்கள் சொன்னதை கடைபிடிக்க முடியவில்லை" என பதிவிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த இணைய வாசி ஒருவர், நீங்கள் எடுத்த அனைத்து வீடியோக்களையும் கூகுள் டிரைவில் போட்டு பகிருங்கள் எனக் கூறுகிறார். அதற்கு அந்த ரசிகை காப்பிரைட் பிரச்னை வராமல் இருந்தால் நான் கட்டாயம் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.