லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையான வேலியண்ட்டை வெற்றிகரமாக அரங்கேற்றியபின், இன்று சென்னை திரும்பினார் இசைஞானி இளையராஜா. விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், தனக்கு 82 வயதாகிவிட்டதாக நினைக்க வேண்டாம், இனி தான் எல்லாமே ஆரம்பம் என கூறியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘வேலியண்ட்‘ சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி

வெறும் 35 நாட்களில், 4 மூவ்மென்ட்டுகளாக இசைஞானி இளையராஜா உருவாக்கிய தனது முதல் சிம்பொனியான ‘வேலியண்ட்‘-ஐ, கடந்த 8-ம் தேதி, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில், அங்குள்ள உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் ஃபில்ஹாமோனிக் ஆர்க்கெஸ்ட்ராவை கொண்டு நேரடியாக இசைத்து, அரங்கேற்றினார் இசைஞானி. இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் இசைஞானி இளையராஜா.

இந்த வரலாற்று நிகழ்வை, 80-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து அரங்கேற்றினார் இளையராஜா. அவரது சிம்பொனி இசை, அங்கு வந்திருந்த ரசிகர்களை கிரங்க வைத்தது. அது மட்டுமல்லாமல், அது குறித்து வெளியான வீடியோக்களும் வைரலாகியுள்ளது.

“அரசு சார்பில் வரவேற்றது நெகிழ்ச்சி அளிக்கிறது“

இந்நிலையில், தனது முதல் சிம்பொனியை வெற்றிகரமாக அரங்கேற்றிவிட்டு நாடு திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். இந்நிகழ்வில், பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு உற்சாகமாக பேட்டியளித்தார் இளையராஜா.

அப்போது, அனைவரது வாழ்த்தும், இறைவனின் ஆசியும், தனது சிம்பொனி அரங்கேற்றத்தை, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக மாற்றியதாக கூறினார். மேலும், முதலமைச்சர் அரசு சார்பில் மரியாதை அளித்து தன்னை வரவேற்றது, நெஞ்சை நெகிழ வைப்பதாக தெரிவித்தார். அதோடு, தமிழக மக்கள் அனைவரும் தன்னை வாழ்த்திக்கொண்டிருப்பது பெருமை அளிப்பதாகவும் கூறினார்.

“சிம்பொனி இசையை டவுன்லோட் செய்ய வேண்டாம்“

அதோடு, தன்னுடைய சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த சிம்பொனி இசையை மக்கள் நேரில் கேட்டு மகிழவேண்டும் என தெரிவித்த அவர், அதற்காக நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், 13 நாடுகளில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த, ஏற்கனவே தேதிகள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் இளையராஜா தெரிவித்தார். தமிழர்கள் இல்லாத நாடுகளிலெல்லாம் கூட இந்த சிம்பொனி இசை ஒலிக்கும்போது, நம் மண்ணில் உள்ளவர்கள் அந்த இசையை கேட்க வேண்டாமா என கேள்வி எழுப்பிய அவர், அதற்காக இங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

“82 வயதாகிவிட்டது என நினைக்க வேண்டாம், இனி தான் எல்லாம் ஆரம்பம்“

மேலும், இந்த இசை இதோடு நின்றுவிடாது என கூறிய அவர், இதுதான் ஆரம்பம் என தெரிவித்தார். இவருக்கு 82 வயதாகிவிட்டது, இனி என்ன செய்யப் போகிறார் என்று நினைத்துவிட வேண்டாம், நீங்கள் நினைக்கும் அளவிற்குள் நான் இல்லை என கூறினார். அதோடு, பன்னைபுரத்திலிருந்து வெறும் காலோடு நடந்து புறப்பட்ட தான், வெறும் காலிலேயே நடந்து, இந்த இடத்திற்கு வந்து வெறும் காலில்தான் நிற்பதாகவும், இதை இளைஞர்கள் உணர்ந்து, தன்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவரவர் துறைகளில் சிறந்து விளங்கி, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.