ARTICLE AD BOX
1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் பெரியார் காப்பாற்றினார் என்று வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் தெரிவித்தார்.
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் பங்கேற்று பேசியதாவது:- தமிழகத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு சித்தாந்த போர். கோட்பாட்டு போர். வகுப்புரிமைக்கு குரல் கொடுப்பவர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள். வகுப்பு வாதத்தை பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். வகுப்புவாதம் என்பது நஞ்சை உருவாக்கின்ற ஒரு நச்சுக் கிருமி ஆகும். அந்த நச்சுக்கிருமி இப்போது பள்ளிகள், கல்லூரிகள், ஊடகங்கள் மற்றும் பாட நூல்களிலும் புகுத்தப்படுகிறது. இப்படி வகுப்புவாத நஞ்சு புகுத்தப்பட்டவர்கள்தான் தமிழ்நாடு வேண்டாம், தமிழகம் வேண்டும் என்று சொல்கிறார்கள். பெரியார் வேண்டாம், ஈ.வெ.ரா என்று சொல்லுங்கள் என்கிறார்கள். அறிஞர் அண்ணா என்று வேண்டாம், அண்ணாதுரை என்று சொல்லுங்கள் என்கிறார்கள்.
1934 மே 21ஆம் நாள்தான் பெரியாரும், அண்ணாவும் முதன்முறையாக திருப்பூரில் சந்தித்தார்கள். அப்போதுதான் அண்ணாவின் பேச்சை கேட்டு எல்லோரும் வியக்கிறார்கள். இப்படி எல்லோரும் சொல்லுகிற செய்தியை கேட்டுத்தான் பெரியார் தன்னிடத்திற்கு வரவழைத்து கேட்டார். பெயர் அண்ணாதுரை, ஊர் காஞ்சிபுரம், என்ன படித்திருக்கிறீர்கள்? என்று கேட்கிறார். 2 எம்.ஏ. அடுத்து என்ன செய்ய இருக்கிறீர்கள் என்று பெரியார் கேட்டார். ஒரு நொடியில் ஐயா என்ன சொல்கிறீர்களோ அப்படி செய்யலாம் என்று இருக்கிறேன் என்று அண்ணா சொன்னார். அதுதான் அண்ணாத்துரையை, பேரறிஞர் அண்ணாவாக மாற்றியது. நான் நடத்தும் இதழுக்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் வேண்டும். என்னுடைய இதழுக்கு வாருங்கள் என்றார். ஒப்புகொண்டார் அண்ணா. பெரியாரிடத்தில் 7 ஆண்டுகள் அண்ணா வேலை பார்த்தார். யார் வந்து கேட்டலும் தன்னிடம் உள்ள 100 ரூபாய் நோட்டுகளை கிழித்து கொடுத்துவிடுவார். அன்றைக்கு கிழித்து கொடுத்தால் செல்லும். அப்படி வளர்த்தது தான் திராவிட இயக்கம்.

மறைமலை அடிகளை பார்க்கச் சென்றார் தந்தை பெரியார். அப்போது மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு சொல்கிறார். 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினீர்களே. அந்த போராட்டத்தில் மறைமலை அடிகளாருடன் இணைந்து போராடிய கா.சு. பிள்ளை இப்போது நெல்லையில் வறுமையில் வாடுகிறார் என்று சொல்கிறார். இதனை கேட்ட பெரியார் நெல்லைக்கு சென்று கா.சு.பிள்ளையை சந்தித்து நீங்கள் இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 50 தருவேன் என்று சொன்னார். 50 என்பது இன்றைய மதிப்பில் 1.15 லட்சம் ஆகும். திராவிடத்தை பற்றி பேசியதால் தேவநேய பாவாணர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவரை அழைத்து சேலத்தில் 500 பண முடிப்பு வழங்கினார். அதே பாவாணர் வேலுர் காட்பாடியில் இருந்தார். அந்த வழியாக வரும்போது எல்லாம் பெரியார் 250 கொடுப்பார் என பாவாணர் எழுதுகிறார். யாருக்குமே உதவாத கஞ்சன் என்று சொல்லப்பட்ட பெரியாரிடம் இருந்து இவ்வளவு பெரிய தொகையை பெறுவது எளிய செயலா? எழுதியவர் பாவாணர்.
பெரும் செல்வராக இருந்த பெரியார், நாட்டு மக்களுக்கு கல்வியை வழங்கினார். வகுப்புரிமை என்கிற கொள்கையில் வெற்றி பெற்றார். இந்தி திணிக்கப்பட்டபோது 1938ல் ஒன்றரை ஆண்டுகள் போராடி வெற்றிபெற்றார். கட்டாய இந்தி ஒழிக்கப்பட்டது. அந்த நாள் இன்றைக்கு உலக தாய்மொழி தினமான பிப்ரவரி 21. கட்டாய இந்தி ஒழிக்கப்பட்டதால் காப்பாற்றப்பட்டது தமிழ் மொழி மட்டுமல்ல. இந்திய மொழிகள் அனைத்தும்தான். இந்திய மொழிகள் அனைத்தையும் பாதுகாத்து தந்த பெருமை தந்தை பெரியாரையே சாரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.