Gaza: `ஹமாஸுக்கு இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே இருக்கிறது...' - முழு முடிவையும் விளக்கிய இஸ்ரேல்!

4 hours ago
ARTICLE AD BOX

ஹமாஸ் - இஸ்ரேல் இடையே தொடர்ந்து வந்தப் போர், போர் நிறுத்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில் சில வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், கடந்த செவ்வாய் கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் காஸா மீது மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேருக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில், இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் இன்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கிறார்.

இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார்

அதில், ``இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 42 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது முடிவடைந்துவிட்டது. பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கும் வாக்குறுதியிலிருந்து, ஹமாஸ் பின்வாங்கியுள்ளது. இது ஒப்பந்தத்தை மீறுவதாகும். எனவே, ராணுவ அழுத்தத்தை நாடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. பணயக்கைதிகளை விடுவிப்பது, இஸ்ரேல் மீது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடங்க ஒருபோதும் ஆயுதம் ஏந்தமாட்டோம் என உறுதி அளித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டு, கீழ்ப்படிந்தால், மீண்டும் அமைதி நிலவ யோசிக்கலாம்.

ஆனால் ஹமாஸ் அமைதியை விரும்பவில்லை என்பது, பணயக்கைதிகளை விடுவிக்காமல் இருக்கும் நடவடிக்கையில் தெரிகிறது. அமெரிக்காவின் ஆலோசனைகளை ஹமாஸ் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளது. அதனால் இஸ்ரேலுக்கு போரைத் தவிர வேறு வழியில்லை. ராணுவ அழுத்தம் பயனுள்ளதாக இருக்கிறது. ராணுவ அழுத்தம் காரணமாகவே 254 பணயக்கைதிகளில் 195 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காஸாவில் யூதர்கள் - பாலஸ்தீனியர்கள் இருவருக்கும் மத்தியில் அமைதியை ஏற்படுத்த இஸ்ரேல் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்கா முழுமையாக ஆதரவளித்துள்ளது.

காஸா

எனவே, இஸ்ரேல், எந்த விலை கொடுத்தாவது விரும்பிய முடிவை அடைய தன் முயற்சிகளைத் தொடரும். இராஜதந்திர ரீதியாக தீர்வு காண முடியவில்லை என்றால், அதை ராணுவ ரீதியாக அடைவோம். உலகளாவிய கண்டனங்கள் எங்கள் தரப்பு உண்மைகளை மாற்றாது. காஸா பகுதியில் பணயக்கைதிகளை வைத்திருக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு உள்ளது. அவர்கள் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகள் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பாலஸ்தீன மக்களையும் அதன் தவறான செயல்களுக்கு பணயக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள்.

உலக நாடுகள் அனுப்பும் உதவிகளை ஹமாஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, பாலஸ்தீன மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இஸ்ரேலை சரணடையவைப்போம் என நம்பிக்கையளித்து மக்களை மிரட்டி, பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இஸ்ரேலை சரணடைய வைப்பது ஒருபோதும் நடக்காது. உலக நாடுகள், இஸ்ரேலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, ஹமாஸ் மீது அழுத்தம் கொடுத்து, பணையக் கைதிகளை மீட்டு, அமைதியை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம். இராஜதந்திர ரீதியாக காஸாவிலிருந்து ஹமாஸின் உயர்மட்ட அதிகாரிகளை வெளியேற்றுவதன் மூலமும் காஸாவில் அமைதியை ஏற்படுத்தலாம்.

நெதன்யாகு

ஒரு புதிய, மிதமான பாலஸ்தீன தலைமையை ஊக்குவிப்பதன் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு நம்பிக்கையளிக்க உலக நாடுகள் முன்னெடுக்கலாம். ராணுவ அழுத்தத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுபவர்கள், பயங்கரவாத அமைப்பிடம் இஸ்ரேல் சரணடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. காஸா மீதான தனது கட்டுப்பாடு முடிந்துவிட்டது என்பதை ஹமாஸ் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் அதிகாரத்தை கைவிட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க ஒரு வாய்ப்பை வழங்க, காஸாவை விட்டுச் செல்ல வேண்டும்.

எனவே, ஹமாஸிடம் இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஆக்கபூர்வமான முறையில் ராஜதந்திர ஆலோசனைக்கு திரும்புவது. அல்லது இதற்கு ஒத்துழைக்காமல் போருக்கு வழி அமைப்பது. ஒருவேளை அவர்கள் இரண்டாம் முடிவை தேர்வு செய்தால், ஹமாஸுடன் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதக் குழுக்களையும் முற்றிலுமாக அகற்றிவிட்டு, காஸாவின் அதிகாரத்தை ஒரு புதிய பாலஸ்தீனத் தலைமைக்கு வழங்க இஸ்ரேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். காஸாவில் அமைதியையும் செழிப்பையும் கொண்டுவர உதவும் சர்வதேச நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் பாதை அமைக்கும்.

நெதன்யாகு - ட்ரம்ப்

இஸ்ரேலுக்கு இதைச் செய்வதற்கான ஆற்றல் உள்ளது. ஆனால் முதல் வழியை, உரையாடலை - நாங்கள் விரும்புகிறோம். ஹமாஸ் ஒத்துழைக்க மறுத்தால் மட்டுமே இரண்டாவது விருப்பத்தை நாடுவோம். இந்த புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் 75,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இஸ்ரேலின் புனித நகரமான ஜெருசலேமில் பிரார்த்தனை செய்ய வருகிறார்கள். நாங்கள் எப்போதும் மத சுதந்திரத்தை ஆதரித்து வருகிறோம். பயங்கரவாதிகளைத்தான் நாங்கள் அழிக்கிறோம்" என்றார்.

இந்தியா, ரஷ்யா, சீனாவுக்கு ட்ரம்ப் போடும் கூட்டல், கழித்தல் கணக்கு; கைகொடுக்குமா?! | Explainer
Read Entire Article