ARTICLE AD BOX
உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளைத் தேடி உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த கலோரிகளில் அதிக ஊட்டமளிக்கும் உணவுகளை மக்கள் விரும்பி உண்கின்றனர்.
குறிப்பாக மீன்கள். இவை புரதச்சத்து மிக்கவை, அவற்றின் இறைச்சியில் தாதுக்கள் உள்ளன, மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
சுவையிலும், ஊட்டச்சத்திலும் சிறந்தது நன்னீர் மீன்களா அல்லது உப்பு நீர் மீன்களா (Fresh water Fish - Marine Fish) என்ற விவாதம் எப்போதும் இருப்பதுண்டு. அதற்கு விடை தேட முயலலாம்.
உப்பு நீர் மீன்கள்
டூனா, கானாங்கெளுத்தி, சால்மன் போன்ற பெரிய கடல் மீன்கள் சிகப்பு இறைச்சி (ரெட் மீட்) என அழைக்கப்படுகின்றன. இவை அயோடின், சின்க் மற்றும் இரும்பு சத்து நிறைந்தவை.
கடல் மீன்களின் இறைச்சி இரத்த சுரப்பை அதிகரித்து, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. செயற்கையான உப்பில் இருக்கும் அயோடினை விட மீனிலிருக்கும் அயோடின் சிறந்தது. தைராய்டு தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.
நன்னீர் மீன்கள்
கேட்ஃபிஷ், பங்காசியஸ், டிலாபியா போன்ற மீன்கள் மற்றும் அதன் வகையைச் சேர்ந்த மற்றவை குளம், ஆறு, ஏரி போன்ற இடங்களில் வசிக்கின்றன. நன்னீர் மீன்களில் அயோடினும் இரும்பு சத்தும் குறைவாக இருந்தாலும், அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கும். உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மூளை வளர்ச்சிக்கும் உதவும்.
உப்பு நீர் மற்றும் நன்னீர் மீன்களின் ஊட்டச்சத்து வேறுபாடுகள்!
கலோரிகள்
பொதுவாக உப்பு நீர் மீன்கள் நன்னீர் மீன்களைவிட அதிக கலோரிகள் கொண்டிருக்கின்றன. ஆனால் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாமையை கருத்தில் கொள்ளும்போது கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியானவைதான் என்கிறது மேக் சீ கனக்ஷன் தளம்.
ஒரு கிலோ கேட்ஃபிஷ் 1245 முதல் 1700 கலோரிகளைக் கொண்டிருக்கும். உப்பு நீர் மீன்களோ 1500 முதல் 2300 கலோரிகளைக் கொண்டிருக்கும்.
அமினோ அமிலங்கள்
கடல் மீன்கள் அதிக அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. நன்னீர் மீன்களில் 6.12% முதல் 19.52% அமினோ அமிலங்கள் உள்ளன, குறிப்பாக கேட் ஃபிஷ்ஷில் அதிகம் உள்ளது.
கடல் மீன்களில் 17 முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன. அவற்றில் 13% முதல் 21% வரை அமினோ அமிலங்கள் உள்ளன. டூனா, சால்மன் மீன்களில் அதிக அமினோ அமிலங்கள் உள்ளன.
உயிர்சத்துகள் மற்றும் தாதுகள்
கடல் மீன்களும் நன்னீர் மீன்களும் வைட்டமின் ஏ மற்றும் டி உடன் பலவகையான வைட்டமின் பி சத்தும் நிறைந்திருக்கின்றன. நன்னீர் மீன்களில் 1 முதல் 1.7% தாதுக்கள் உள்ளன, ஆனால் உப்பு நீர் மீன்களில் அயோடின், துத்தநாகம், ஃபுளூரைடு மற்றும் குளோரின் போன்ற அதிக தாதுக்கள் உள்ளன.
குறிப்பிட்ட நோய்களுக்கு எதிரான பயன்கள்
பல பாரம்பரிய மருத்துவங்களில் நன்னீர் மீன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் உப்பு நீர் மீன்கள் நவீன மருத்துவமுறையில் பல ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.
நன்னீர் மீன்களால் இரவில் வியர்த்தல், சோர்வு, சளி, வாயு பிடிப்பு போன்றவற்றை குணப்படுத்த முடியும் என சில நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் நம்பப்படுகிறது.
கடல் மீன்களில் ஒமேகா 3 மற்றும் DHA அதிகம் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், ரத்த கட்டுகளை தடுத்தல், தமனி பிளேக் உருவாவதைக் குறைக்கவும் உதவும். இதனால் கடல் மீன்கள் இதய நோயாளிகளுக்கு உதவும்.
அபாயங்கள்
ஒவ்வொரு மீனும் அதற்கான பயன்களைக் கொண்டிருப்பதுபோல, எதிர்மறை தாக்கங்களையும் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் ஒவ்வொரு மனிதருக்கும் இது மாறுபடும்.
மீன்கள் எளிதில் கெட்டுவிடக் கூடும் என்பதனால், மிகவும் கவனமாகவே உட்கொள்ள வேண்டும். கெட்டுவிட்ட மீன்களில் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாகும்.
நன்னீர் மீன்களில் ஒட்டுண்ணி புழுக்களைக் கொண்டிருக்கலாம், அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கடல் மீன்கள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கலாம். சில கடல் மீன்களில் மெர்குரி இருக்கக்கூடும், இது குளைந்தல் மூளை வளர்ச்சிக்கு கேடு.
சில கடல் மீன்கள் நச்சுத்தன்மை கொண்டவை. Nha Trang Oceanography Institute நடத்திய ஆய்வில் வியட்நாமில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் 22 வகை மீன்களைக் கண்டுபிடித்தனர்.
சுவை
நிச்சயமாக இந்த தலைப்பு தனிப்பட்ட மனிதர்களைப் பொருத்து மாறுபடும். ஆனால் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
உப்பு நீர் மீன்கள் நன்னீர் மீன்களை விட மீன்வாசனை குறைவானவை. ஏனென்றால் கடல் மீன்கள் மிகப் பெரிய பரப்பில் வசிக்கின்றன. எப்போதும் வேட்டையாடிகளின் ஆபத்து இருப்பதாலும், மிகப் பெரிய பரப்பில் உணவைத் தேட வேண்டியது இருப்பதாலும் சுறுசுறுப்பாகவே இருக்கும். அதிகம் நீந்துவதனால் அவற்றின் தசை நெகிழ்ந்து சுவைமிக்கதாக இருக்கும்.
டூனா மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் அதிக புரதச் சத்து இருப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவற்றில் ஹிஸ்டைடின் இருப்பதனால் உணவு நச்சு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இறுதியாக, ஊட்டச்சத்துகளைப் பொருத்தவரை இரண்டு மீன்களுமே சிறந்தவை. தனிப்பட்ட விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற மீன்களை வாங்கி உண்ண இந்த பதிவு உதவியாக இருக்கும். அவற்றின் நன்மை தீமைகளை கருத்தில் கொண்டு முடிவு செய்யலாம்!
Clownfish: 'பெண்ணாக மாறும் ஆண் மீன்' - நீமூவின் வாழ்க்கையும், டிஸ்னி மறைத்த உண்மையும்!