Fact Check: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முகமது ஷமி முக்கிய பங்காற்றினார்.

ரமலான் மாதத்தில் தண்ணீர் குடித்த முகமது ஷமி:

இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் என்பது மிகவும் முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதம் அவர்கள் நோன்பு இருப்பது வழக்கம். இந்த சூழலில், சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின்போது கடும் வெயிலில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த முகமது ஷமி தனது உடலின் சக்திக்காக உற்சாக பானம் அருந்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மன்னிப்பு கேட்டாரா முகமது ஷமி?

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முகமது ஷமி மன்னிப்பு கோருவது போல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் முகமது ஷமி ஆம். நான் நோன்பு இருப்பதை மீறிவிட்டேன். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே என்னை தவறு செய்து தவறாக கருத வேண்டாம். நான் இதை வேண்டுமென்று செய்யவில்லை. என்னை நோன்பை மீறுமாறு கட்டாயப்படுத்தினார்கள். இல்லாவிட்டால் எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிடுவார்கள். இஸ்லாமிய சகோதர மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் பேசுவது போல இருந்தது.

இதுதான் உண்மை:

இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராயும்போது இது போலி என்று தெரியவந்தது. 2024ம் ஆண்டு முகமது ஷமி ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவில் குரலை மாற்றி இந்த போலி வீடியோவை பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இஸ்லாமியர்கள் மத்தியில் முகமது ஷமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும், இஸ்லாமியர்கள் மற்ற மதத்தினருக்கு வெறுப்பை விதைக்கும் விதமாகவும் இந்த வீடியோவை விஷமிகள் சிலர் பகிர்ந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

பொதுவாக, ரமலான் மாதத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளின்போது இஸ்லாமிய கிரிக்கெட் வீரர்கள் உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதற்காக இதுபோன்று குடிநீர், உற்சாக பானத்தை அருந்துவது வழக்கமான ஒன்றாகும். பாகிஸ்தான் நாட்டு வீரர்களும் இதையே பின்பற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

34 வயதான முகமது ஷமி 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 229 விக்கெட்டுகளையும், 108 ஒருநாள் போட்டிகளில் ஆடி 206 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளையும், 110 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 127 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Logically Facts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.