Explained : `அதென்ன Enemy Property?' - சைஃப் அலிகானின் ரூ.15,000 கோடி சொத்தில் உள்ள சிக்கலென்ன?

7 hours ago
ARTICLE AD BOX

Enemy Property - எதிரிச் சொத்து

இந்தியாவின் தற்போதைய பேசுபொருள்களில் ஒன்று 'எதிரிச் சொத்து'. சில தினங்களுக்கு முன்பு திருடனால் கத்தியால் குத்தப்பட்ட பாலிவு நடிகர் சைஃப் அலிகான், இந்த எதிரிச் சொத்து விவகாரம் மூலம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார். எதிரிச் சொத்து என்றால் என்ன? அவர்களின் சொத்தை அரசு உரிமைக் கொண்டாட காரணம் என்ன? இதற்கு சைஃப் அலிகானுக்கும் என்னத் தொடர்பு போன்ற கேள்விகள் எழலாம்... அலசுவோம்!

சைஃப் அலிகான்
எதிரிச் சொத்து

இந்தியா எனப் பெயர் சூட்டப்பட்ட இந்த நிலம், ஆரம்பத்தில் பல சமஸ்தானங்களாக இயங்கிவந்தது. ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் சமஸ்தானங்கள் செயல்பாட்டில்தான் இருந்தது. 1947-ம் ஆண்டு அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1965-ல் பிரிவினை, 1971-ல் போர் என இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மத்தியில் நடந்த உறவுச் சிக்கல்கள், 1962-ல் நடந்த சீன-இந்தியப் போர் உள்ளிட்டக் காரணங்களால், இந்தியா 'எதிரி நாடுகள்' என சில நாடுகளை வரையறுத்தது.

போர் சூழல், பிரிவினைச் சூழல் போன்ற நிலைகளில் இந்தியாவிலிருந்து எதிரி நாடுகள் என வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு யாரெல்லாம் புலம்பெயர்ந்து சென்று, அந்த நாட்டின் தேசியத்தை ஏற்றுக் கொண்டார்களோ, அவர்களின் சொத்துகள் எதிரிச் சொத்துகள் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புச் சட்டம், 1962-ன் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ், இந்த சொத்துக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ், இந்தியாவிற்கான எதிரி சொத்துக் காப்பாளரிடம் (CEPI) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சார்பாக எதிரி சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு பாதுகாவலருக்கு உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் 1965
சைஃப் அலிகானும் - எதிரிச் சொத்தும்:

1940-களில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சமஸ்தானத்தை ஆட்சி செய்துவந்தவர் நவாப் ஹமிதுல்லா கான். இவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவர் ஆபிதா சுல்தான். இவர் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது 1950-களில் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். இரண்டாவது மகளான, சஜிதா சுல்தான் இந்தியாவிலேயே இருந்தார். இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளுக்காகவும் கிரிக்கெட் விளையாடிய இப்திகார் அலிகான் பட்டோடியை திருமணம் செய்துகொண்டு, கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகானை பெற்றார். மன்சூர் அலிகானின் மகன்தான் பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை கரீனா கபூரின் கணவருமான சைஃப் அலிகான்.

1960-ல் ஹமிதுல்லா கான் இறந்தபோது, அவரின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஒரே வாரிசாக இந்திய அரசாங்கம் சாஜிதா சுல்தான் பேகத்தை அங்கீகரித்தது. நவாப் ஹமிதுல்லாகான் 'அனைத்து தனியார் சொத்துக்களுக்கும், அசையும் மற்றும் அசையாது அத்தகைய சொத்துக்களை சஜிதா சுல்தான் பேகத்திற்கு மாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. மூத்த மகள் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததால், சாஜிதா சொத்துக்கள் அனைத்திற்கும் உரிமையாளராகிவிட்டார்" எனக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நவாப் குடும்பம்

அதைத் தொடர்ந்து ஆபிதா சுல்தானின் சொத்துகளும், சாஜிதா சுல்தானின் சொத்துகளும் பங்குபிரிக்கப்பட்டு, அதில் போபாலில் உள்ள நூர்-உஸ்-சபா அரண்மனை, தார்-உஸ்-சலாம், ஹபிபி பங்களா, அகமதாபாத் அரண்மனை, கொடிப் பணியாளர் இல்லம் ஆகிய சொத்துக்கள் நடிகர் சைஃப் அலிகானுக்கு வழங்கப்பட்டது. இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.15,000 கோடி எனக் கூறப்படுகிறது.

அரசும் - வழக்கும்!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நவாப் வாரிசான ஆபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதால், அந்த சொத்துகள் குறித்து மூன்று ஆண்டுகள் இந்தியாவிற்கான எதிரி சொத்துக் காப்பாளர் (CEPI) குழு தீவிர விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டில் இந்த சொத்துக்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் சைஃப் அலிகான் வழக்கு தொடர்ந்தார்.

சாஜிதா - ஆபிதா

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சைஃப் அலிகானின் சொத்தை கையப்படுத்தும் முடிவை நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதம் அந்தத் மத்திய அரசுக்கு வழங்கியத் தடையை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மேலும், அடுத்த 30 நாளுக்கும் இந்தியாவிற்கான எதிரி சொத்துக் காப்பாளர் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதுவரை சைஃப் அலிகான் தரப்பு எந்த மேல்முறையீடும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், இந்த சொத்துகளை அரசு கையகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

எதிரி சொத்து கையகப்படுத்தப்பட்ட பிறகு என்ன நடக்கும்?

எதிரி சொத்து வழிகாட்டுதல்கள் - 2018-ன் படி, இந்தியாவிற்கான எதிரி சொத்தின் பாதுகாவலரிடம் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வதற்கான விலையை, மாவட்ட நீதிபதிகள் தலைமையிலான மதிப்பீட்டுக் குழுக்கள் தீர்மானிக்கின்றன. அவற்றின் விரிவான பட்டியல், அவற்றின் மதிப்பீடு ஆகியவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இந்த சொத்துக்களின் மதிப்பைப் பொருத்து மூத்த அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய 'எதிரி சொத்து அகற்றல் குழு' சொத்துக்களை விற்கலாமா, குத்தகைக்கு விடலாமா, அல்லது பராமரிக்கலாமா என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கும்.

மோடி - சைஃப் அலி

அதன் அடிப்படையில் அந்த சொத்துகள் கையாளப்படும். காலியாக உள்ள சொத்துக்களை அதிக விலைக்கு வாங்குபவருக்கு ஏலம் விடலாம், அதே நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள் ஏற்கனவே உள்ள குடியிருப்பாளர்களுக்கு குழுவால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பில் வழங்கப்படலாம். பங்குகள் போன்ற அசையும் எதிரி சொத்துக்கள், பொது ஏலம், டெண்டர்கள் போன்ற பிற அங்கீகரிக்கப்பட்ட முறைகள் மூலம் விற்கப்படலாம். இந்த வருமானம் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்தியாவில் எவ்வளவு எதிரி சொத்துக்கள் இருக்கின்றன?

ஜனவரி 2, 2018 அன்று மக்களவையில் பேசிய அப்போதைய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் ``9,280 எதிரி சொத்துக்களை பாகிஸ்தானியர்களும், 126 சொத்துகளை சீன நாட்டவர்களும் விட்டுச் சென்றுள்ளனர்" என்று கூறினார். 2018 நவம்பரில், 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள எதிரி சொத்துகளை விற்கும் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2020-ம் ஆண்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு, இந்தியாவிற்கான எதிரி சொத்தின் பாதுகாவலரிடம் உள்ள பாகிஸ்தானியர்களின் அசையா சொத்துகளின் எண்ணிக்கை மொத்தம் 12,983 சொத்துக்கள்.

சைஃப் அலிகான் சொத்து

இதில், அதிகபட்ச எண்ணிக்கையிலான சொத்துகள் உத்தரப் பிரதேசத்திலும் (5,688), மேற்கு வங்கத்தில் (4,354) சொத்துகளும் உள்ளன. இதில், 9,400 க்கும் மேற்பட்ட எதிரி சொத்துக்களை அகற்றுவதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் கோடி என மதிப்பிடுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Saif Ali Khan: நீதிமன்ற உத்தரவால் சிக்கல்; ரூ.15,000 கோடி சொத்தை இழக்கும் சைஃப் அலிகான் குடும்பம்?
Read Entire Article