ARTICLE AD BOX

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்டது. இருப்பினும் இந்த தொடரின் கடைசி போட்டியில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ஆறுதல் வெற்றியாவது பெற்று ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்புகள் குறைவு என்கிற வகையில் எதிரணிக்கு டார்கெட் வைத்துள்ளது.
இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி போட்டியில் இன்று விளையாடி வருகிறது. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், பேட்டிங்கை தேர்வு செய்தவுடன் அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிலிப் சால்ட் 8 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக களத்திற்கு வந்த ஜேமி ஸ்மித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ஜோ ரூட், பென் டக்கெட் இருவரும் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த சமயத்தில் அணிக்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஆனால், அந்த நம்பிக்கை கொஞ்ச நேரம் கூட நிலைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், ஜோ ரூட் 37, பென் டக்கெட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
ஹாரி புரூக் 19, ஜோஸ் பட்லர் 21, லியாம் லிவிங்ஸ்டோன் 9, ஜேமி ஓவர்டன் 11 என தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் அணி 129-7 என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதன்பிறகு அணியில் பேட்ஸ்மேன் இல்லை என்பதால் இங்கிலாந்து இன்னிங்ஸ் 38.2 ஓவர்களில் முடிவுக்கு வந்துவிட்டது. இறுதியாக இங்கிலாந்து அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 200 ரன்கள் கூட தொடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இங்கிலாந்து அணி இப்படி குறைவான ரன்களில் சுருள முக்கியமான காரணமே தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களான மார்கோ ஜான்சன், வியான் முல்டர் ஆகியோர் தான். இவர்கள் இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். மேலும், இங்கிலாந்து அணி 180 ரன்கள் இலக்கு வைத்த நிலையில், தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிக்கு இந்த இலக்கு சிறிய இலக்கு என்று சொல்லலாம். விரைவாகவே போட்டியை முடிக்க விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.