ARTICLE AD BOX
அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. இதன்மூலம் பணிநீக்கம், நிதி ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் போராடி வருகின்றனர். மறுபுறம் இவ்விவகாரம் தொடர்பாக அங்குள்ள நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா நாட்டில் அரசு ஊழியர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். மேலும், ஊழியர்கள் பிப்.24க்குள் தங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவும் கோரியிருந்தார்.
இந்த நிலையில், ஒருவார கால பணி குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், மஸ்க் கொடுத்த காலக்கெடு அமலில்தான் உள்ளது என்றும் ஊழியர்கள் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியே ஆக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஊழியர்கள் மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பாமல் இருக்க முடியாது என்று அரசின் மனிதவள துறையாக செயல்படும் நிர்வாக அலுவலகம் சார்பில் அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மஸ்க் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிய அரசு ஊழியர்களை என்ன செய்வதென்றும் அவற்றை எப்படி ஆய்வு செய்வது என்பது குறித்து நிர்வாக அலுவலகம் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது. முன்னதாக, எஃபிஐ, சிஐஏ உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டாமென ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப், “முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க விரும்பும் நிறுவனத் தலைவர்களிடமிருந்து மட்டுமே மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பக் கோரப்பட்டுள்ளது. இதனால் எலானுடன், அவர்கள் எந்த வகையிலும் சண்டையிடும் நோக்கத்தில் இதைச் செய்யச் சொல்லவில்லை. கடந்த வாரம் என்ன வேலை செய்தார்கள் என்பதை அவர்கள் உண்மையில் சொல்ல விரும்பாத சில நபர்கள் உள்ளனர். மற்றவர்கள் அது மிகவும் புத்திசாலித்தனமான யோசனை என்று நினைத்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.