ARTICLE AD BOX
Dragon Positive Review: மூன்று கதாநாயகிகள்.. ரொமான்ஸ், எமோஷன், காமெடி.. புகுந்து விளையாடும் பிரதீப்
சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டிராகன். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் இருக்கும் பாசிடிவ்வான விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
கல்லூரியில் மிகவும் அழிச்சாட்டியம் செய்து கொண்டு 48 அரியர் வைத்த ஒருவன் எப்படி, தனது வாழ்க்கையை எதிர் கொள்கிறான் என்பதை கதையாகக் கொண்டு, படத்தை உருவாக்கியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. படம் தொடங்கிய முதல் சீனில் இருந்து கிளைமேக்ஸ் சீன் வரை படத்தில் வேகமும் சுவாரஸ்யமும் கொஞ்சம் கூட குறையவில்லை.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அவரவர் கதாபாத்திரத்திற்கு அவரவர் நச்சென பொருந்திப் போயுள்ளார்கள். இதில், மிஷ்கின் கதாபாத்திரமும் மரியம் ஜார்ஜ் கதாபாத்திரமும் அசத்தல். குறிப்பாக மிஷ்கினின் பிரின்ஸ்பல் கதாபாத்திரம் மிரட்டல். அனுபமா தனது கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு ஸ்கோர் செய்யமுடியுமோ, அந்த அளவிற்கு பர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தியுள்ளார். கயாடு லோஹர் தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளார். கிளைமேக்ஸில் வரும் இவானா கிளாப்ஸ்களை ஒரே சீனில் அள்ளி விடுகிறார்.

படத்தை முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை தனி ஆளாக சுமந்து நிற்கிறார் பிரதீப் ரங்கநாதன். கல்லூரியில் கெத்து காட்டும் டிராகன் தொடங்கி, அதே கல்லூரியில் கெத்து என நினைத்துக் கொள்வது எல்லாம் சுத்த வேஸ்ட் என புரிந்து கொண்டு அதே கல்லூரியில் டி. ராகவனாக படிப்பில் சின்சியராக கவனம் செலுத்தும் காட்சி, காமெடி காட்சிகள், ரொமான்ஸ், எமோஷ்னல் காட்சிகள் என அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார். அனைத்தும் அவருக்கு நன்கு வொர்க் அவுட் ஆகியுள்ளது.

படத்திற்கு தனது பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் மேலும் பலம் சேர்த்துள்ளார், லியோன் ஜேம்ஸ். திரைக்கதை நகர்வைப் பார்க்கும்போது, இதுதான் அடுத்து என யோசிக்கும் போது, ட்விஸ்ட் அண்ட் ட்ரன் என படத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு உயர்த்திக் கொண்டே உள்ளார் அஸ்வத் மாரிமுத்து. குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சி, அனுபமா பரமேஸ்வரன் சாப்டரை ரீ-ஓபன் செய்தது எல்லாம் தியேட்டரிக்கல் மொமண்ட்ஸ். ஜாலியான வசனம் தொடங்கி, கிளைமாக்ஸ் எமோஷ்னலான வசனம் வரை என அனைத்தும் கைதட்டல்களை அள்ளுகிறது. என்னதான் யு/ஏ சான்றிதழ் படமாக இருந்தாலும், தரமான கருத்தை ஆழமாக பேசும் இந்தப் படத்தில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உயரப் பறக்க தகுதியான டிராகன் தான்.