ARTICLE AD BOX
Donald Trump-க்கு வைரத்தில் சிலை வடித்த சூரத் தொழிலதிபர்.. அடேங்கப்பா.. விலையே மட்டும் கேட்காதீங்க!!
ஜனவரி 20-ஆம் தேதி அன்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ளார். இவர் தற்போது 2-வது முறையாக அதிபர் பதவியில் அமர்ந்துள்ளார். அவருடைய பதவிக்காலத்தை சிறப்பாக்கும் வகையில் சூரத்தைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் அவருக்கு தனித்துவமான பரிசு ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளது. குஜராத்தை சேர்ந்த ஒரு வைர தொழிலதிபர் 4.5 கேரட் மதிப்புள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரத்தை பயன்படுத்தி ட்ரம்பின் உருவத்தை அதில் செதுக்கியுள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி, 5 ரத்தினவியலாளர்கள் இணைந்து இந்த வைர சிலையை வடிவமைத்துள்ளனர். இதற்காக 2 மாதங்கள் அயராது உழைத்ததாகவும் கூறப்படுகிறது. சூரத் நகரம் வைரங்களின் கட்டிங் மற்றும் பாலிஷ் தொழிலுக்கு பிரபலமான ஊராகும். இங்கு ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்படும் வைரங்களும் உள்ளன.
இந்த நேர்த்தியான வடிவமைப்பின் பின்னால் மூளையாக செயல்பட்டது தொழிலதிபர் ஸ்மித் பட்டேல் ஆவார். செயற்கையான வைரங்களாக இருந்தாலும் இவற்றின் தோற்றம், மதிப்பு மற்றும் தரம் ஆகியவை இயற்கை வைரங்களை போலவே இருப்பதாகவும், இதில் சிக்கலான கட்டிங் மற்றும் மெருகூட்டல் செயல்முறையை செய்ததாகவும் ட்ரம்பின் உருவத்தை செதுக்கிய ரத்தினவியலாளர்கள் கூறியுள்ளனர்.
"எங்கள் சூரத் கைவினைஞர்கள் டோனால்ட் ட்ரம்பின் உருவத்தைக் கொண்ட தனித்துவமான, செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரத்தை வடிவமைத்துள்ளனர். டிரம்பின் உருவத்தைக் கொண்ட இந்த வைரக்கல் 2 மாதமாக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டது. சூரத்தில் இருந்து ஒரு சிறப்பு பரிசாக டொனால்ட் டிரம்ப்பிற்கு இது வழங்கப்பட உள்ளது என்று ஸ்மித் தெரிவித்தார்.
ட்ரம்பின் உருவம் செதுக்கப்பட்ட இந்த வைரக்கல் பிரபல டி கிரேட் வைரம் என கூறப்படுகிறது. இந்த வைரங்கள் தூய்மை மற்றும் பளபளப்புக்கு பெயர் பெற்றது. மேலும் இந்த வைரக்கல்லின் விலையை ஸ்மித் வெளியிடவில்லை என்றாலும், கிரீன்லேப் டயமண்ட்ஸால் உருவாக்கப்பட்ட இந்த வைரத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் செயற்கையாக உருவாக்கப்பட்ட 7.5 கேரட் வைரத்தை உருவாக்கிய அதே நிறுவனம்தான் தற்போது இந்த வைரத்தையும் உருவாக்கியுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடனுக்கு இதை பரிசாக வழங்கினார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்ற சில மணி நேரங்களுக்கு பிறகு, ஜனவரி 20ஆம் தேதி அன்று பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். தனது தொடக்க உரையின் போது அமெரிக்காவின் பொற்க்காலம் இனிதே தொடங்குவதாக கூறினார்.