Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா?

10 hours ago
ARTICLE AD BOX

Doctor Vikatan: என் தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு தலையில் முடியே இல்லை. இது குறித்து அவளுக்கு பெருங்கவலை. குழந்தை வளர்ந்த பிறகும் இப்படியே இருந்துவிட்டால் என்ன செய்வது என புலம்புகிறாள். குழந்தைகள், இப்படி முடி இல்லாமல் பிறப்பது சகஜம்தானா.... பிற்காலத்தில் சரியாகிவிடக் கூடிய பிரச்னையா இது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

சரும நல சிகிச்சை மருத்துவரும், கப்பிங் தெரபி நிபுணருமான தலத் சலீம்

குழந்தைகள் பிறக்கும்போது இருக்கும் தோற்றத்தை வைத்து, அவர்களின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். முடி வளர்ச்சி குறித்த விஷயமும் இப்படித்தான்.

சில குழந்தைகள்  கருகருவென அடர்த்தியான தலைமுடியுடன் பிறப்பார்கள். இன்னும் சில குழந்தைகள் தலையில் முடியே இல்லாமலும் பிறக்கலாம். இரண்டுமே சகஜம்தான். எப்படியிருப்பினும் இந்த முடியானது உதிர்ந்து மறுபடி வளரும். அதுதான் இயற்கை  என்பதால் அது குறித்து பயப்படத் தேவையில்லை. 

Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்?

குழந்தையின் முடி வளர்ச்சி என்பது கருவிலிருக்கும் போதான நிலை, பிரசவத்துக்குப் பிறகான நிலை என இரண்டு கட்டங்களைக் கொண்டது. பிரசவத்துக்குப் பிறகான குழந்தையின் முடி வளர்ச்சியானது 18 மாதங்களில்கூட ஆரம்பிக்கலாம். இரண்டாம்கட்ட வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். 

ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்கு முன்பே, இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு முதல்கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பமாகும். 

சில குழந்தைகளுக்கு முதல்கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பமாகும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் சில மாதங்களுக்கோ, சில வருடங்களுக்கோ கூட குழந்தையின் மண்டையில் முடியே இல்லாமல் இருப்பதையும் பார்க்கலாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டது. தேவையற்ற ஒப்பீடுகளால் உங்கள் நிம்மதியைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தைக்கு குறிப்பிட்ட மாதங்கள்வரை தாய்ப்பால் கொடுப்பது, அதன் பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் சரிவிகித உணவுகளைப் பழக்குவது என ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமாக வளர்க்கப் பாருங்கள். முடி வளர்ச்சியும் ஆரோக்கியமாகவே இருக்கும். பிறந்த குழந்தையை நினைத்து சந்தோஷப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, தேவையற்ற இந்தப் பிரச்னை குறித்து கவலைகொள்வது அனாவசியமானது என உங்கள் தோழிக்குச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Myths & Facts: அம்மாவுக்கு வயிற்றில் அரிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு முடி அதிகம் வளருமா?

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article