ARTICLE AD BOX
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா... எந்த மாதங்கள் அதற்குப் பாதுகாப்பானவை.. கர்ப்பமாக இருக்கும் போது தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்கும் என்று சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உங்களுக்கு ப்ளீடிங் பிரச்னை போன்ற எதுவும் இல்லை என்றால், பாதுகாப்பான முறையில் தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். அதனால் எந்தப் பிரச்னையும் வராது.
ஆனால், நீங்கள் கர்ப்பத்தின்போது செய்து பார்த்த ஸ்கேனில், குழந்தையின் நஞ்சு கீழே இருப்பதாகவோ, கட்டிகள் ஏதும் இருப்பதாகவோ, வேறு பிரச்னைகள் இருப்பதாகவோ குறிப்பிட்டிருந்தால் கர்ப்பகாலத்தின் போது தாம்பத்திய உறவைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. இதுபோன்ற பிரச்னைகள் இருக்கும் நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் ப்ளீடிங் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே காரணம்.
பிரச்னைகள் ஏதுமில்லை என்ற பட்சத்தில் கர்ப்பகாலம் முழுவதும் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா என்றும் சிலர் கேட்கிறார்கள். அப்படி அர்த்தமல்ல. கர்ப்பத்தின்போது தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள 5 முதல் 7-ம் மாதங்கள் பாதுகாப்பானவை. கர்ப்பகாலம் முழுவதும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் சுகப்பிரசவம் நிகழுமாமே என்ற கேள்வியும் நிறைய பெண்களிடம் இருப்பதைப் பார்க்கிறோம்.

தாம்பத்திய உறவின்போது வெளிப்படும் விந்தணுக்களில் புராஸ்டாகிளாண்டின் எனப்படும் ரசாயனம் இருக்கும். இந்த ரசாயனமானது, கர்ப்பப்பைத் தசைகளை இறுக்கித் தளர்த்த ஆரம்பிக்கும். அந்த வகையில் கர்ப்பத்தின் 9-வது மாதத்துக்குப் பிறகு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதன் மூலம், புராஸ்டாகிளாண்டின் சுரப்பானது, கர்ப்பப்பைத் தசைகளைச் சுருக்கித் தளர்த்துவதால், சுகப்பிரசவம் நிகழும் வாய்ப்புகள் சற்று அதிகரிக்கும்.
இது பொதுவான அறிவுரைதான். மற்றபடி, உங்களுடைய கர்ப்பத்தின் தன்மை, அதில் உள்ள பிரச்னை, ரிஸ்க் போன்றவற்றைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் இந்த விஷயத்தில் அறிவுறுத்தும் விஷயங்களைப் பின்பற்றுவதுதான் சரியானது. சுகப்பிரசவத்துக்கு உதவும் என்ற ஒற்றைவரியை மட்டும் நம்பிக்கொண்டு, கர்ப்பத்தில் பிரச்னைகள் உள்ள நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஆபத்தில் முடியலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.