ARTICLE AD BOX
கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் பிதற்றலோடு பேசுவதை திமுக அனுமதிக்காது என அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘அமுத கரங்கள்’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு:-
கேள்வி:- அண்ணா சாலைக்கு வர தயார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளாரே?
அண்ணாமலை இன்னும் கர்நாடக போலிஸ் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார். அண்ணாசாலையில்தான் அண்ணா அறிவாலயம் உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் பிடுங்கும் வரை ஓயமாட்டேன் என்று சொன்ன பேச்சுக்குதான் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தின் ஒரு செங்கல்லைஆவது தொட்டு பார்க்க சொல்லுங்கள். இந்த இயக்கம் நீருபூத்த நெருப்பாக இருக்கும் இயக்கம். நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் அல்ல திமுக. கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் இப்படி பிதறலோடு கூறுவதை திமுக அனுமதிக்காது. இது போன்ற பேச்சால் திமுக இன்னும் வலுப்பெறும்.
கேள்வி:- அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளாரே?
அண்ணா அறிவாலயத்திற்கு திமுகவில் சேர வரலாம். நட்பு பாராட்ட வரலாம். அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கற்களை பிடுங்கி எடுத்துவிடுவேன் என்றால் எப்படி அனுமதிக்க முடியும். அவர் ஒரு வயது முதிர்ந்த அரசியல் வாதி, அவர் மீது நாங்களும், முதலமைச்சரும் மரியாதை வைத்து உள்ளார். ரெட் லைட் ஏரியா என அவர் சொல்வது அவரது எண்ணத்தை காட்டுகிறது.
கேள்வி:- கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் பரப்பி வருகின்றனரே?
மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு தருகிறார்கள் என்று பார்ப்போம். கெட் அவுட் என்ற வார்த்தைக்கு உகந்த ஒருவர் ஒன்றிய பிரதமர்தான்.
