அறிவியல் கல்வியை அடிப்படையாகக் கொண்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை எதிர்ப்பதால், தமிழ்நாடு அரசு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

’’புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 8ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கற்றலை உறுதி செய்யும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. அறிவியல் கல்வியை அடிப்படையாகக் கொண்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை எதிர்ப்பதால், தமிழ்நாடு அரசு ரூ.2,500 கோடியை அல்ல, 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கிறது.

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாக, பொறுப்புள்ள பதவியில் இருப்போர் பரப்பக் கூடாது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள், மத்திய அரசின் நிதியை முழுமையாகப் பெறுகின்றன.

தமிழ்நாடு அரசு நிராகரிப்பது பிற்போக்குத்தனமானது

மாணவர் நலனுக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரிப்பது பிற்போக்குத்தனமானது. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது

தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைந்ததுதான் சமக்ரா சிக்ஷா திட்டம். பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் இதனுடன் இணைந்ததுதான்.

தமிழ் மொழியை ஊக்குவிக்கிறோம்

தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்தை நடத்தி வருகிறது. திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கையில், ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியைத் திணிப்பது என்பதே கிடையாது’’.

இவ்வாறு வீடியோவில் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.