ARTICLE AD BOX
டெல்லியில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல், ஆயுத கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஹசிம் பாபா மீது 12க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவனை டெல்லி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஹசிம் பாபாவிற்கு டெல்லியில் அதிகமான அடியாள்கள் இருந்தனர். ஹசிம் பாபா சிறைக்குச் சென்ற பிறகு அவனது மாஃபியா கூட்டத்தை அவனின் மூன்றாவது மனைவி சோயா கான்(33) முன்னின்று வழி நடத்தி வந்தார்.
இது குறித்து போலீஸாருக்கு தெரிய வந்தது. ஆனால் சோயா கான் மீது நேரடியாக எந்த வழக்கும் இல்லை. அவர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்பதை நிரூபிக்க சாட்சியமும் இல்லை. ஒவ்வொரு முறையும் போலீஸார் சோயா கானை கைது செய்ய நினைக்கும் போது அதிலிருந்து தப்பித்து வந்தார். ஹசிம் பாபாவும், சோயா கானும் வடகிழக்கு டெல்லியில் அருகில் அருகில் வசித்து வந்தனர்.

சோயா கான் ஏற்கெனவே ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்திருந்தார். இதே போன்று ஹசிம் பாபாவும் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமானவர். இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஹசிம் பாபாவின் அடியாள்களுடன் சோயா கானும் தொடர்பில் இருந்தார். திடீரென ஹசிம் பாபா கைதானதால் அவரது கிரிமினல் கூட்டத்தை சோயா முன்னின்று நடத்தி வந்தார்.
சோயா கான் அதிக அளவில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அதிக அளவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆனால் தன்னை ஒருபோதும் கிரிமினல் கூட்டத்தின் தலைவி என்று காட்டிக்கொள்ள மாட்டார். அடிக்கடி ஆடம்பர பார்ட்டிகளில் கலந்து கொண்டு தன்னை ஒரு பெரிய ஆள் போல் காட்டிக்கொள்வார். எப்போதும் விலை உயர்ந்த ஆடைகள், சொகுசு கார் என்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். அதனை அடிக்கடி தனது சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அடிக்கடி சோயா கான் தனது கணவரை சந்திக்க திகார் சிறைக்கு செல்வது வழக்கம். அங்கு ஹசிம் பாபா தனது மனைவியிடம் சந்தேக மொழியில் கூட்டத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்று பயிற்சியும், ஆலோசனையும் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். எனவே ஹசிம் பாபா கூட்டாளிகள் மட்டுமல்லாது வேறு கிரிமினல்களுடனும் சோயா கான் நேரடி தொடர்பு வைத்திருந்தார்.
மும்பையில் தாவூத் இப்ராகிம் சகோதரி ஹசீனா பார்கர் தனது கணவர் சிறைக்குச் சென்ற பிறகு எப்படி அவரது கிரிமினல் வேலைகளை தானே முன்னின்று நடத்தினாரோ, அதே போன்று சோயாகான் முன்னின்று கணவனின் கிரிமினல்களை வழிநடத்தினார். எனவே அவரை கைது செய்ய டெல்லி போலீஸார் பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தனர். புலனாய்வுத்துறை தொடர்ந்து அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்து வந்தது. குற்றப்பிரிவும் தனியாக அவரை தேடி வந்தது.
புலனாய்வுத்துறை போலீஸாருக்கு அவரின் இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்தது. உடனே இது குறித்து அதனை குற்றப்பிரிவு போலீஸாருடன் பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து அதிரடியாக செயல்பட்டு வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் என்ற இடத்தில் சோயா கானை கைது செய்தனர். அவரிடம் 270 கிராம் ஹெராயின் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்த போதைப்பொருளை உத்தரப்பிரதேச மாநிலம் முஜாபர்நகரில் இருந்து வரவழைத்து இருந்தார். அவற்றை டெல்லியில் விற்பனை செய்ய நினைத்தபோது பிடிபட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நாதிர் ஷா என்ற ஜிம் பயிற்சியாளர் டெல்லியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரை சுட்டுக்கொலை செய்த நபருக்கும் சோயா கான் தான் அடைக்கலம் கொடுத்திருப்பார் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"சோயா கான் குடும்பமும் கிரிமினல் பின்னணி கொண்டது. அவரது தாயார் விபசார வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் இருக்கிறார். அவரது தந்தை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர். சோயா கானும் டெல்லி முழுக்க போதைப்பொருள் சப்ளை செய்து வந்தார்" என்று போலீஸார் தெரிவித்தனர். எப்போதும் வெளியில் செல்லும்போது சோயா கானுடன் 4 முதல் 5 அடியாள்களுடன் செல்வது வழக்கம். மொத்தத்தில் டெல்லியில் பெண் தாதாவாக வலம் வந்துள்ளார்.