Christopher Nolan's Next: `ஒடிசியஸாக மாட் டாமன்' - அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கிய நோலன்

1 week ago
ARTICLE AD BOX
தன் தனித்துவமாக படைப்புகளின் மூலமாக உலகெங்கிலும் அறியப்பட்டு பெரும் ரசிகர்களைக் கொண்டவர் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன்.

கடைசியாக இவர், நடிகர்கள் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியரை வைத்து `ஒப்பன்ஹெய்மர் (OPPENHEIMER)' திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 2023-ம் ஆண்டு ஜீலை மாதம் வெளியானது. 2014-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான இண்டர்ஸ்டெல்லார் (INTERSTELLAR) திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நோலன் தன் அடுத்த திரைப்படத்தின் பணிகளில் இறங்கிவிட்டார். முதற்கட்டமாக மேட் டாமன் மற்றும் டாம் ஹாலன்ட் நடிகர்களாக தேர்வான நிலையில், இத்திரைப்படம் `மிஷன் இம்பாசிபிள்' பாணியிலான ஸ்பை- த்ரில்லர் கதை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த திரைப்படம் கிரேக்க இதிகாசக் காப்பியமான 'தி ஒடிசியை (THE ODYSSEY) ' மையமாக வைத்து உருவாகி வருவதாக பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தது. அதனை படக்குழுவும் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. திரைப்படத்தின் X தளப் பக்கத்தில் இருந்து படத்தின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மாட் டாமன் கிரேக்க உடையில் நிற்கும் அந்தப் பதிவில், அவர் ஒடிசியஸ் (ODYSSEUS) கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

நோலன்

கிரேக்க கவிஞர் ஹோமர் (HOMER) எழுதிய மகா காப்பியம் தான் `தி ஒடிசி'. கிரேக்க மன்னன் ஒடிசியஸ், டிரோஜன் போருக்கு பிறகு தன் தாய்நாட்டிற்குத் திரும்பும் 10 ஆண்டுகள் பயணமும் போகும் வழியில் நடக்கும் நிகழ்வுகளும்தான் ஒடிசியின் கதை. முன்னணி கதாபாத்திரமான ஒடிசியஸாக மேட் டாமன் நடிக்கும் நிலையில் பிற கதாபாத்திரங்கள் குறித்த வேறு அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

முதல் புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் திரைப்படம் வரும் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என அதே பதிவில் தெரிவித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்திற்கு புதிய ஐமேக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Read Entire Article