Chennai Tirupati NH: சென்னை திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோயிலை அகற்றக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை:

சென்னை திருப்பதி இடையேயான நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தும் திட்டம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூரில் இருந்து ஆந்திர மாநில் எல்லை வரையிலான, 44 கிலோ மீட்டர் தூர இரண்டு வழிப்பாதையை நான்கு வழியாக மாற்றுவது இந்த திட்டத்தின் இலக்காகும். பல நூறு கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பட்டரைப்பெரும்புதூரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஒரு நிலத்தடி அறை கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இது அருகிலுள்ள கோயிலுக்கு செல்ல வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கோயிலை இடிக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க தொடங்கியுள்ளனர். அதனால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் அகலப்படுத்தல் பணிகளில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 26 கோயில்கள் இருந்ததாகவும், திட்டப்பணிகளுக்காக அவற்றில் 17 அகற்றப்பட்டதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நடந்தது என்ன?

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “ சாலை விரிவாக்க பணிகளுக்காக கோயில் நிலம் வேண்டும் என நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளித்து இருந்தோம். கோயில் திருவிழா முடியும் வரை காத்திருக்குபடி அவர்கள் தெரிவித்தனர். காத்திருந்ததை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு நிலத்தை கையகப்படுத்த சென்றபோது, பக்தர்களும் அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலை இடித்து நிலத்தை கையகப்படுத்தக் கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை அணுக உள்ளோம்” என தெரிவித்தனர்.

அகழ்வாராய்ச்சி நடத்த கோரிக்கை

கோயில் தொடர்பாக பட்டரைப்பெரும்புதூர் மக்கள் பேசும்போது, ”அந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. குலோத்தூங்க சோழன் காலத்து கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன. கோயில் அங்கேயே இருக்க வேண்டும். அதனை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது. கோயிலில் உள்ள சிவன் மற்றும் நவக்கிரக சிலைகளை வேறு இடத்திற்கு மாற்ற மட்டுமே, பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலுக்கு சுரங்க அறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் பாதை எங்கு செல்கிறது என்பது அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறிய வேண்டும்” என வலியுறுத்துகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் இந்த கோயில், பரம்பரை அறங்காவலர் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன அறை அது?

ரகசிய அறை தொடர்பாக பேசும் வரலாற்று ஆசிரியர்கள், “அர்த்த மண்டபத்தின் கீழ் கதவு மற்றும் சுரங்கப்பாதை போன்ற அமைப்பு இருந்தால், அது ஒரு நீலாவரையாக இருக்கலாம். அது சிலைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை தேவைப்படும் போதெல்லாம் மறைத்து வைக்கும் அறையாகும். 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்களில் கூட இதுபோன்ற அறைகள் உள்ளன. வழிப்பறி செய்பவர்கள், கொள்ளையர்களிடம் இருந்து முக்கிய பொருட்களை மறைத்து வைப்பதற்காக இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்” என குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், கோயில் நிலம் கையகப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட பாதையிலேயே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடருமா? அல்லது கோயில் இருக்கும் இடத்தை கையகப்படுத்தாமல் சாலையின் தடம் மாற்றப்படுமா? எனபதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.