Charles Darwin: 'பதற்ற நோயாளி' டார்வின் பல ஆண்டுகள் கப்பலில் பயணித்தது எப்படி? | My Vikatan

6 hours ago
ARTICLE AD BOX

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

இவ்வளவு பெரிய கப்பலா? இதில் எப்படிப் பயணம் செய்யப் போகிறேன்?‌ அதுவும் இரண்டு ஆண்டுகள். அடிக்கடி வரும் தலைச்சுற்றலை என்ன செய்வது? அதைக்கூடச் சமாளித்து விடலாம். அந்த வயிற்று வலியை நினைத்தால் தான்...

இல்லை. நான் கப்பலேறப் போவதில்லை.

நான் என்ன ஏறுவது? அவர்களே என்னைத் தகுதி நீக்கம் செய்து விடுவார்கள். என்னைப்போன்ற ஒரு நோஞ்சானைக் கப்பலில் சேர்த்துக் கொள்வார்களா என்ன? 

ஒருவேளை சேர்த்துக்கொண்டால்?

சார்லஸ் டார்வினுக்கு (Charles Darwin) பதற்றம் அதிகமானது. இதயம் படபடத்தது. உடலெங்கும் வியர்வை முத்துக்கள் முளைத்தன. ஆனால் இது ஓர் அரிய வாய்ப்பு‌! எல்லோருக்கும் கிடைத்து விடாதல்லவா? என்ன செய்யலாம்? குழப்பமான இந்த மனநிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் டார்வின் துடித்தார். 

நண்பர்கள் பலரிடமும் இதைப் பற்றிப் பேசினார். நீண்ட யோசனைக்குப் பிறகே தீர்க்கமான அந்த முடிவை எடுத்தார் டார்வின்.

'புறப்படலாம்...'

1831. டிசம்பர் 27. 

ஹெச்.எம்.எஸ். பீகிள் (HMS Beagle) எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பல், இங்கிலாந்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தன்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கப் போகும் பயணம் இதுவென்பது. 

ஆம். பீகிள் அனுபவங்களைக் கொண்டுதான், ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 'உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species)' புத்தகத்தை எழுதினார் டார்வின்.

Charles Darwin

இரண்டு ஆண்டுகள் என ஆரம்பித்து, மொத்தம் ஐந்து ஆண்டுகள் (1831-1836) நீடித்தது பீகிள் பயணம். ஆனால் பதற்ற நோயாளி என அறியப்படும் டார்வினால் இத்தனை ஆண்டுகள் எப்படிக் கடலில் பயணம் செய்ய முடிந்தது? உண்மையில் டார்வினுக்குப் பதற்ற நோய் இருந்ததா?

விடை தெரிய டார்வினின் இளமைக் காலம் நோக்கிப் பயணிக்க வேண்டும். 

சார்லஸ் டார்வின் 1809ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ஷ்ரூஸ்பரி (Shrewsbury) எனும் ஊரில் பிறந்தார். டார்வினின் தந்தை, ஒரு மருத்துவர்‌. தந்தையின் தந்தையும் மருத்துவரே! வசதியான குடும்பத்தில் பிறந்த டார்வின், ஒன்பது வயதில் தாயைப் பறிகொடுக்கிறார். எனவே அவருக்கு எல்லாமுமாய் இருந்தவர்கள், உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே.

படிப்பில் சுமார் ரகம். விளையாட்டில் பூஜ்ஜியம். இசை? இரைச்சல். ஓவியமா? அப்படியென்றால்? இப்படித்தான் பள்ளிக்காலம் ஓடியது. தந்தையின் ஆசைப்படி மருத்துவப் படிப்பு சேர்ந்தார். அங்கே ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைப் பார்த்த டார்வின், 'ரத்தம் ரத்தம்...' என அலறி அடித்துக்கொண்டே ஓடி விட்டார். அத்தோடு டார்வினின் மருத்துவப் படிப்புக்குச் சுபம் போடப்பட்டது. 'எனக்கு மனுசங்க ரத்தம் பாத்தா தான் பயம். மத்தபடி ஐ லவ் ஹண்ட்டிங்...' எனக் கண்ணில் படும் விலங்குகளை எல்லாம் வேட்டையாடினார் டார்வின். 

வேட்டையாடிய விலங்குகளை ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றைப் பதப்படுத்துவதிலும் நேரத்தைச் செலவிட்டார். படிக்கும் வயதில் இப்படியெல்லாம் செய்தால் யார் தான் அவரை மதிப்பார்கள்? குடும்பத்தின் மத்தியில் 'உதவாக்கரை' என்ற இமேஜே டார்வினுக்கு இருந்தது. ஆனால் உலகின் தலைசிறந்த இயற்கை ஆர்வலராகக் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறிக் கொண்டிருந்தார் டார்வின். கிட்டத்தட்ட இந்த நேரத்தில் தான் டார்வினுக்குப் பீகிள் பயண வாய்ப்பும் கிடைத்தது.

காணாமல் போன டார்வினின் குறிப்புகள் 22 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்தது எப்படி?

கடற்கரை தீவுகளை ஆய்வு செய்யவும், கடல்வழி போக்குவரத்து குறித்த முழுமையான பாதையைக் கண்டறியவும் ஆய்வுக் குழு ஒன்றை ஏற்பாடு செய்தது இங்கிலாந்து அரசு. அதாவது பல்வேறு துறைகளிலிருக்கும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, அவர்களைக் கப்பலில் அனுப்புவதுதான் திட்டம். அதில் டார்வினும் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். 

பீகிளில் பயணம் செய்யத் துவங்கியபோது டார்வினின் வயது என்ன தெரியுமா? வெறும் 22.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பயணத்தில் டார்வின் செய்த ஆராய்ச்சிகளெல்லாம் தனிக்கதை. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம். இனி நம் கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்.

*

1997 ல், 'Journal of the American Medical Association (JAMA)' வெளியிட்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் டார்வினுக்கு இருந்த மனநலப் பிரச்னைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. 

'பேனிக் அட்டாக் (Panic Attack)' பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். 

பதற்றம், குழப்பம், நெஞ்சு படபடப்பு, நடுக்கம் எனச் சொல்லாமல் கொள்ளாமல் சுனாமி போல தீடீரென ஒருசேர வரும். சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்த அட்டாக், உயிர் பிரியும் பயத்தைக் கொடுத்துவிடும். 'சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா...' என இதனால் பாதிக்கப்படுவோர் நடுங்குவர்‌. இந்த 'அட்டாக்'குகள் தொடர்ந்து வந்தால் அதுவே பேனிக் டிசாடர் (Panic Disorder) எனப்படும்.

டார்வினுக்கு இந்த பேனிக் டிசாடரோடு சேர்ந்து அகோராபோபியா (Agoraphobia) எனும் 'அச்சம்' சார்ந்த நோயும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  அகோராபோபியாவும் பதற்ற நோயின் ஒரு வகைமைதான். அதாவது கடினமான அல்லது சங்கடமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியாமல் போனால் உருவாகும் அதீத பயம். 

இதனாலேயே இந்நோயால் பாதிக்கப்படுவோர் வெளியே செல்வதற்கு அஞ்சுவார்கள். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக மாட்டார்கள். கூட்டத்தைக் கண்டால் பயம், தனியாக இருந்தால் பயம், லிஃப்ட் ஏறினால் பயம், லிஃப்ட் இறங்கினால் பயம்...

டார்வின், தன்னுடைய மருத்துவப் பிரச்னைகளைச் சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார்‌. அன்றாடம் அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளை ஒரு டைரியில் எழுதி வைப்பது அவருடைய வழக்கம். அதுவே அவருக்கிருந்த பிரச்னைகள் குறித்த ஆதாரமாக இப்போது இருக்கிறது.

உதாரணத்திற்குச் சில வரிகள் :

'என்னுடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என்னுடைய தலை அடிக்கடி சுற்றிச் சுழல்கிறது...'

'என்னால் உடலையும் மனதையும் என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை...'

டார்வின் தன்னுடைய நெருங்கிய நண்பரான ஜோசப் ஹூக்கருக்கு (Joseph Hooker) எழுதிய கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

'தொடர்ச்சியான தாக்குதல்கள், என் வாழ்க்கையில் தாங்க முடியாத தொந்தரவாக இருக்கின்றன. என்னுடைய எல்லா வேலைகளையும் இவை நிறுத்துகின்றன...'

இதன் மூலம் டார்வினுக்கு இருந்த பதற்ற நோயின் தீவிரம் குறித்து அறிய முடிகிறது. இதில் 'தாக்குதல்கள் (Attacks)' என பேனிக் அட்டாக்கை தான் அவர் குறிப்பிட்டிருக்கக் கூடும். டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆசானாக இருந்தவர் ப்ரொபசர் ஹென்ஸ்லோ‌ (John Stevens Henslow). சொல்லப்போனால் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் தான் பீகிள் பயணத்தையே மேற்கொண்டார் டார்வின்.

ஹென்ஸ்லோவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த டார்வின், 'எனக்குச் சமீப காலமாக உடல்நிலை சரியில்லை. இதயத் துடிப்பு அதிகமாக இருக்கிறது. அடிக்கடி வயிறு வலியும் உண்டாகிறது...' எனக் கடிதம் எழுதியிருக்கிறார். இதையே காரணமாக வைத்து, புவியியல் துறையில் தனக்கு வழங்கப்பட்ட கெளரவ பொறுப்பு ஒன்றையும் நிராகரித்திருக்கிறார். 

டார்வின் கோட்பாடு தவறு என்ற அமைச்சர் சத்யபால் சிங்கின் பேச்சு சரியா? என்ன சொல்கிறது அறிவியல்?

1859ம் ஆண்டு, தன்னுடைய கோட்பாடுகளை எல்லாம் தொகுத்து 'The Origin of Species' புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். அதுவரை, 'கடவுள் தான் எல்லா உயிரினங்களையும் படைத்தார்...' என்று நம்பி வந்த மக்களுக்கு அப்புத்தகம் அதிர்ச்சி குண்டை வீசியது.

மூடநம்பிக்கைகளுக்குள் மூங்கி நீச்சலடித்துக் கொண்டிருந்த காலம் அது. 'உலகை உருவாக்கியவர் கடவுள்...' என்கிற எண்ணம்தான் அப்போது எல்லோரிடமும் இருந்தது. அந்த நேரத்தில் இறைநம்பிக்கைக்கு எதிரான கருத்தை முன்வைக்க எவ்வளவு மனதைரியம் வேண்டியிருக்கும்? பதற்ற நோயும், அச்ச நோயும் கொண்ட ஒருவனால் இது சாத்தியமா?

'உலகில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு மூதாதையர் மட்டுமே இருந்திருக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வெவ்வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கின்றன...' என்கிற அறிவியல் பூர்வமான டார்வினின் கோட்பாட்டை மதவாதிகள் எதிர்த்தனர். 

'படைப்புக் கொள்கை' ஒருபக்கம், 'பரிணாமக் கொள்கை' ஒருபக்கம் என இரண்டு அணிகள் உருவாகின. படைப்பு கொள்கைவாதிகள், பல்வேறு வகைகளில் டார்வினுக்கு அழுத்தத்தைக் கொடுத்தார்கள். ஆனால் எல்லா  விமர்சனங்களையும் தைரியமாக எதிர்கொண்டார் டார்வின்.

டார்வின் தன்னுடைய இறுதி நாட்களை, ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு சிறிய கிராமத்தில்தான் கழித்தார். எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய மனைவியே அவருக்கு உறுதுணையாக இருந்தார். தனிமை விரும்பியான அவர், என்றுமே கூட்டத்தோடு கலந்ததில்லை. கடைசி வரையில் ஏதாவது ஒரு ஆராய்ச்சியில் தன்னை அவர் ஈடுபடுத்திக்கொண்டே இருந்தார்.

உயிரினங்களின் தோற்றம் பற்றி உலகுக்குச் சொன்ன டார்வின், 1882ல், ஏப்ரல் 19 ஆம் தேதி மறைந்தார். ஐசக் நியூட்டனின் சமாதிக்குச் சில அடி தூரத்தில் டார்வினின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

2025ல் இருக்கிறோம். இன்றும் மனப்பிறழ்வுக்குச் சாமியாரிடம் போகும் கூட்டம்தான் இங்கே அதிகம். எனில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த உலகைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மூடநம்பிக்கைகளுக்குள் மூங்கி நீச்சலடித்துக் கொண்டிருந்த காலம் அது.

'உலகை உருவாக்கியவர் கடவுள்...' என்கிற எண்ணம்தான் அப்போது எல்லோரிடமும் இருந்தது. அந்த நேரத்தில் இறை நம்பிக்கைக்கு எதிரான கருத்தை முன்வைக்க எவ்வளவு மன தைரியம் வேண்டியிருக்கும்? பதற்ற நோயும், அச்ச நோயும் கொண்ட ஒருவனால் இது சாத்தியமா? 

இதுதான் டார்வினின் மனநலப் பிரச்னைகள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது எனக்குத் தோன்றியது.

பீகிள் பயணத்தின்போது பல்வேறு உடல் உபாதைகளை அனுபவித்தார் டார்வின். ஆனால் அவையெல்லாம் கடலுக்குச் செல்லும் யாருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகள் தான். வயிறு வலி, தலைச்சுற்றல் போன்ற பயண ஒவ்வாமைதான் டார்வினுக்கு இருந்திருக்கிறதே தவிரப் பதற்ற நோய் பற்றிய விரிவான குறிப்புகள் ஏதும் இல்லை. அவையெல்லாம் பீகிள் பயணம் முடிந்த பிறகே டார்வினுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எது எப்படியோ, டார்வினின் ஒப்பற்ற வாழ்க்கையைப் படித்தபோது அவருக்கு இருந்ததாகச் சொல்லப்படும் பதற்ற நோய் குறித்து எவ்விதமான முடிவுக்கும் என்னால் வரமுடியவில்லை. 

உலகமே எதிர்க்கும் எனத் தெரிந்தும் தன்னுடைய ஆய்வுகளை எவ்வித தயக்கமும் இன்றி மாபெரும் புரட்சி செய்த டார்வினை 'பதற்ற நோயாளி' என்று மட்டும் என்னால் சுருக்கிவிட முடியவில்லை .

- சரத்.

டார்வின், காந்தி, நியூட்டன்... மன அழுத்தம் வென்று சாதித்துக் காட்டிய உலகத் தலைவர்கள்! #NoMoreStress

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read Entire Article