ARTICLE AD BOX
CCL - சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஆர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் Celebrity Cricket League ஹைதராபாத்தில் வரும் எட்டாம் தேதியிலிருந்து தொடங்குகிறது. திரையில் மட்டும் கலக்கிவந்த ஸ்டார்கள் கிரிக்கெட் க்ரவுண்டிலும் தங்களுடைய திறமையை காட்டி கலக்குவார்கள் என்பதால் இந்த லீக்குக்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறது. இந்தச் சூழலில் CCLல் பங்கேற்கவிருக்கும் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஆர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் கிரிக்கெட் என்றாலே ஒரு மதம் என்ற பேச்சு இருக்கிறது. அந்த மதத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது என்ற சூழலில் திரை நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?.. அப்படி இந்தியாவில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் போட்டிதான் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்.கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்த லீக் கொரோனா காரணமாக இடையில் மூன்று வருடங்கள் மட்டும் நடக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட லீக்: சூழல் இப்படி இருக்க 2025ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரும் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த வருட லீக்கில் சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி டப்பாங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளில் அந்தந்த திரைத்துறையை சேந்த டாப் ஸ்டார்கள் முதல் வளர்ந்துவரும் நடிகர்கள்வரை விளையாடவிருக்கிறார்கள்.
முதல் போட்டி: பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கவிருக்கும் முதல் போட்டியில் கோலிவுட்டிலிருந்து களமிறங்கும் சென்னை ரைனோஸ் அணியும், பாலிவுட்டிலிருந்து களமிறங்கும் மும்பை ஹீரோஸ் அணியும் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டியை முடித்துவிட்டு அடுத்த போட்டியாக அதே நாளில் டோலிவுட்டிலிருந்து களமிறங்கும் தெலுங்கு வாரியர்ஸ் அணியும், சாண்டல்வுட்டிலிருந்து களமிறங்கும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும் மோதுகின்றன. தொடர்ந்து லீக் போட்டிகள், அரையிறுதிகள் நடந்து இறுதிப்போட்டி மார்ச் இரண்டாம் தேதி மும்பையில் நடக்கவிருக்கிறது.
சென்னை ரைனோஸ் அணி: சென்னை ரைனோஸ் அணிக்கு நடிகர் ஆர்யா கேப்டனாக பொறுப்பேற்றிருக்கிறார். அவரைத் தவிருத்து அணியில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவா, சாந்தனு, பிரித்வி, அசோக் செல்வன், கலையரசன், மிர்ச்சி சிவா, பரத் நிவாஸ், ரமணா, சத்யா, தசரதன், சரண், ஆதவ், பாலசரவணன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே 2011, 2012 வருடங்களில் நடந்த செலிபிரிட்டி லீக்கில் சென்னை அணி சாம்பியனாகியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு இரண்டாவது இடம் பிடித்தது.
CCL 2025: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்.. கோப்பையை தட்டித்தூக்கும் அணி எது? மும்பையில் இறுதிப்போட்டி!
ஆர்யாவின் சொத்து மதிப்பு: எனவே இந்த சீசனிலும் சென்னை அணி டஃப் கொடுக்கும் அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனான ஆர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 90 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். நடிப்பது மட்டுமின்றி வேறு தொழில்களிலும் கவனம் செலுத்தும் அவருக்கு Sea Shell, Zaitoon ஆகிய இரண்டு ஹோட்டல்கள் இருக்கின்றன.
சொகுசு கார்கள்: இந்த ஹோட்டல்களில் கடல் உணவுகள் ஸ்பெஷலாக கிடைக்கின்றன. இதன் மூலமும் வருமானம் ஈட்டும் ஆர்யாவிடம் Audi Q7, Benz E Class ஆகிய சொகுசு கார்கள் இருக்கின்றன. அவர் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்ததும் அவர்களுக்கு ஆரியானா என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.