குண்டாக இருந்தால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்பதை பொய்யாக்கி, தன்னுடை பருமனான உடலோடு நடித்து பல ரசிகர்களை சிரிக்க வைத்தவர் தான் பிந்து கோஷ். நடிகர் பிரபு நடிப்பில் வெளியான, 'கோழிகூவுது' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர், உருவ கேலியை தாண்டி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஜெயித்தவர்.

அந்த வகையில் டௌரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்ககூட்டி, நீதியின் நிழல், மங்கம்மா சபதம் என்று ஏராளமான படங்களில் நடித்த பிந்து கோஷ்... ரஜினிகாந்த் விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

திரையுலக வாழ்க்கை இவருக்கு வெற்றிகரமாக அமைந்தாலும், கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. குடிகார கணவரை திருமணம் செய்து கொண்ட பிந்து கோஷ், அவரால் பல கொடுமைகளை அனுபவித்தார். பிந்து கோஷ் நடித்து சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் விற்று குடித்தது மட்டும் இன்றி அனாவஸ்யமாக செலவு செய்து அழித்தார் .

கணவரிடம் இருந்து எஞ்சியது ஒரே ஒரு வீடு தான். அந்த வீட்டையும் விற்று தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுத்தார் பிந்து கோஷ். இவரின் முதல் மகன் பிந்து கோஷை பார்த்து கொள்ளாமல் கைவிட்ட நிலையில், இரண்டாவது மகன் தான் பார்த்துக்கொள்கிறார். ஆனால் அவருக்கு எந்த ஒரு நிரந்தர வேலையும் இல்லாததால் பிந்து கோஷின் மருத்துவ செலவுகளை அவரால் கவனித்துக்கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே பிந்துகோஷின் நிலை அறிந்து அவருக்கு சில நடிகர்கள் உதவியாக கூறப்பட்டது. ஒருகட்டத்திற்கு மேல் யாரும் உதவாத நிலையில், சமீபத்தில் இவருடைய வீடியோ ஒன்று வெளியாகி பலரது மனதை உறைய வைத்தது. அதில் மிகவும் உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்த பிந்து கோஷ், தனக்கு பிபி இருக்கிறது, சுகர் இருக்கிறது, இதயமும் பலவீனமாக உள்ளது. மருத்துவமனைக்கு சென்றால் 50,000 கேட்கிறார்கள் அவ்வளவு செலவு செய்து என்னால் சிகிச்சை எடுக்க முடியாது. நான் வாழ்வதை விட இறந்து விட்டால் கூட சந்தோஷம் என கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து ஷகீலா மற்றும் KPY பாலா ஆகியோர் பிந்துகோஷை நேரில் சந்தித்து 80,000 பணம் கொடுத்து உதவி செய்தனர். மேலும் பாலா உங்களுக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் என்னை கேளுங்கள் நான் செய்கிறேன் என கூறினார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிந்து கோஷ் உடல்நிலை இன்று மாலை மிகவும் மோசமான நிலையில், காலமானார். அவருக்கு வயது 72. நாளை இவரது இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.