ARTICLE AD BOX
லாகூர்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே மிக அதிக இலக்கை வெற்றிகரமாக துரத்தி வென்று இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. மேலும் இந்தப் போட்டியில் எடுக்கப்பட்ட முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்கள் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோர்களாக அமைந்தன.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 351 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவர்களில் 356 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன் 347 ரன்கள் எடுத்தது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

அந்த ஸ்கோரை இங்கிலாந்து அணி முதலில் முறியடித்தது. அடுத்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியின் ஸ்கோரை எட்டி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றின் மிகப் பெரிய சேஸிங் செய்து சாதனை படைத்தது. மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஒருநாள் தொடர்களில் இதுவே அதிகபட்ச சேஸிங் ஸ்கோராகும்.
இதற்கு முன் எந்த அணியும் சாம்பியன்ஸ் டிராபியில் 352 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியதில்லை. மேலும் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது வெற்றிகரமான ஒருநாள் போட்டி சேஸிங் ஆகும். மேலும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவே மிகச்சிறந்த வெற்றிகரமான சேஸிங் செய்யப்பட்ட ஸ்கோர் ஆகும்.
அடுத்து பாகிஸ்தான் மண்ணில் இந்தப் போட்டி நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் மண்ணில் வெற்றிகரமாக சேஸிங் செய்யப்பட்டு இரண்டாவது மிகப் பெரிய ஸ்கோர் ஆகும். இவ்வாறு ஆஸ்திரேலிய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் 165 ரன்கள் அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 150 ரன்களுக்கும் அதிகமாக எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் சதம் அடித்தார். அவர் 77 பந்துகளில் சதம் அடித்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட அதிவேக சதம் என்ற சாதனையை சமன் செய்தார். இவ்வாறு இரண்டு அணியின் வீரர்களும் சதம் அடித்து சாதனைகளை முறியடித்து இருக்கின்றனர்.