தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக 3-வது மொழி கற்பது மாறியுள்ளது. இதை கடவுள் கொடுத்த வாய்ப்பாகவே பாரதிய ஜனதாக் கட்சி பார்க்கிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 56 லட்சம் மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு 200 சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 2010 பள்ளிகளில் சிபிஎஸ்இ பயிற்றுவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாடமொழி, தொடர்பு மொழி தாண்டி விருப்பமொழியாக 3-வது மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால் இந்தி மொழி கட்டாயம் என திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரித்து கூறுகின்றனர். திமுக தலைவர்கள் தாண்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய தலைவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் இந்த தலைவர்கள், பொதுவெளியில் செய்தியாளர்களை சந்திக்கும் போது மாற்றி பேசுகின்றனர். இதுபோன்ற தலைவர்களின் இரட்டை வேடத்தை தொடர்ந்து நாங்கள் அம்பலப்படுத்துவோம் என்றார்.

மும்மொழிக் கொள்கை தொடர்பான கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவு, சீருடை, காலணி ஆகியவை இலவமாக தருவதாக கூறியுள்ளார். அவருடைய அப்பன் வீட்டுப் பணத்தில் இருந்து இது வழங்கப்படவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் இது தரப்படுகிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். துணை முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இதுபோன்று பொறுப்பின்றி பேசக்கூடாது. மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்ற தலைவர்களை பொதுவெளியில் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்தான் தரமில்லாத அரசியல்வாதியாக தமிழகத்தில் உள்ளார். தாத்தா, அப்பா பெயரைச் சொல்லி அரசியல் நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின் தரமான அரசியலை பற்றி எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

அண்ணா சாலைக்கு வர சொல்லி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். 26-ம் தேதி வரை எனக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதற்குப் பிறகு அண்ணா சாலையில் எந்த இடம், எந்த நேரம், என்றைக்கு வர வேண்டும் என குறிப்பிட்டால், நான் மட்டும் தனியாக அங்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் தரமில்லாத வார்த்தை பயன்படுத்தி பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் விமர்சித்தால் அதற்கேற்றபடியே நாங்களும் பதில் கூறுவோம். நேற்று மாலையில் இருந்து கெட்அவுட் மோடி என்பதை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் சவால் விடுக்கிறேன். நாளை காலை 6 மணிக்கு கெட்அவுட் ஸ்டாலின் என சமூக வலைத்தளங்களில் நான் பதிவிட இருக்கிறேன். திமுகவினர் பதிவுகளை விட, பாரதிய ஜனதாக் கட்சியினரின் பதிவுகள் மிக அதிக எண்ணிக்கையில் தேசிய அளவில் நிச்சயம் டிரெண்டிங் செய்வோம்.

மார்ச் 1-ம் தேதி முதல் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில், மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து 90 நாட்களுக்கு கையெழுத்து இயக்கம் நடத்த இருக்கிறோம். மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதால், அதிகாரிகளின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் போலீசார் காவல்நிலையங்களுக்கு பணிக்கு திரும்புமாறு கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதை காவல்துறை உயர் அதிகாரியே ஒத்துக் கொண்டுள்ளார். இதற்கு பின்னரும், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக பொய் கூறிக் கொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையே குற்ற நிகழ்வுகளை அதிகரித்துள்ளதை ஒத்துக் கொண்ட பிறகு தொடர்ந்து அவர் பொய் கூறக்கூடாது.

தமிழகத்தில் கல்வித்துறைக்காக தமிழ்நாடு அரசு நடப்பாண்டிற்கென 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் கல்வித்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவுக்கு பிறகு சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதி 2 ஆயிரம் கோடி வராததால், கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டு விட்டதாக ஒரு பொய்யான மாயத் தோற்றத்தை திமுக அரசு உருவாக்குகிறது. பிம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்க ஒப்புக் கொண்டு விட்டு இப்போது வரை அதை திமுக அரசு செயல்படுத்தவில்லை. கல்வித்துறையை அவர்களால் நடத்த முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு கும்பமேளாவில் இதுவரை 70 கோடி பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாபெரும் சாதனையை பொறுக்க முடியாமல் திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா, குட்கா விற்பனை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பாரதிய ஜனதாக் கட்சித் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தமிழகத்தின் அமைவதுதான். தமிழத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் குற்ற நிகழ்வுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

பாலியல் வன்கொடுமைகள் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரிப்பற்கு, ஆபாசங்கள் செல்போனில் மிக எளிதில் கிடைப்பதுதான் காரணமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பதைப் போல, குட் டச், பேட் டச் குறித்த பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். காவல்துறையினரால் தடுக்கக்கூடிய குற்றங்கள் மற்றும் தடுக்க முடியாத குற்றங்கள் இரண்டும் தமிழகத்தில் மிக அதிகமாகி வருகிறது. காவல்துறையினரால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகரளை நிகழ்வுகளை தடுத்திட முடியாது. இதற்கு கல்வி நிலையங்களில் நாம் நீதிபோதனை வகுப்புகளை அதிகரிக்க வேண்டும். வெறுமனே, கணிதமும் அறிவியலும் மட்டும் சொல்லித் தராமல், மதம் சார்ந்த ஆன்மீக தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்து, இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதங்களில் இருந்தும், பகவத் கீதை, குரான், பைபிள் அனைத்து புனித நூல்களில் இருந்தும் முக்கிய ஆன்மீகத் தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல, பெற்றோரும், குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி அவர்களை கண்காணிக்க வேண்டும். ரோட்டரி, லயன்ஸ் கிளப் போன்ற தன்னார்வ அமைப்புகள் குட் டச் பேட் டச் குறித்து பயிற்சியளிக்க வேண்டும்.

இந்து மதத்தில் கோவில் வழிபாட்டில் சில இடங்களில் இருக்கும் வேறுபாடுகளை களைந்தால் மத மாற்றத்திற்கு அவசியம் இல்லாம் போய்விடும். இவ்வாறு செய்வது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்ணாமலை, சட்டமன்றத் தேர்தலில் போட்டியில் திமுக சார்பில் சாதாரண தொண்டரை நிறுத்தி தோற்கடிப்போம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை, திமுகவில் சாதாண தொண்டர், பல்லி போல ஒட்டிக் கொள்ளும் தொண்டர், போஸ்டர் அடிக்கும் தொண்டர், இன்பநிதி வாழ்க என கோஷம் போடும் தொண்டர் என 15 வகையான தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், பாரதிய ஜனதாக் கட்சியில் பிரதமர் மோடி தொடங்கி அனைவரும் சாதாரண தொண்டர்கள்தான். பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சாதாரண தொண்டர்களும் அவர் அருகில் இருக்கிறார்கள். ஆனால் திமுகவில் அப்படி பார்க்க முடியாது. அம்மாவே கடவுள் என்ற சேகர்பாபு, தற்போது கலைஞரே கடவுள் என மதம் மாறி விட்டார். அவர் ஆலோசனை சொல்லி மாறும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை என பதிலளித்தார்.