good bad ugly: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். தீவிர அஜித் ரசிகரான இவர் தன் வாழ்வை அஜித்குமார் எப்படி மாற்றினார்? என்று பல முறை நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஊக்கம் தந்த அஜித்:

ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் பற்றி பேசியிருப்பதாவது, நேர்கொண்ட பார்வை படத்தின்போது அஜித் சாருடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து எனது வாழ்க்கை சிறப்பாக மாறியது. அப்போதே சார் நாம் ஒரு படம் பண்ணலாம் என்று சொன்னார். நான் அப்போது யோசித்தேன். நாம் ஏதும் நிரூபிக்கவில்லையே? என்று யோசித்தேன்.

மார்க் ஆண்டனி படம் பண்ணுவதற்கு முக்கிய காரணமே அஜித்சார் தந்த நம்பிக்கைதான். என்னை பயங்கரமாக ஊக்குவித்தார். எனக்கு பயங்கரமாக நம்பிக்கை அளித்தார். உன்னால இன்னும் நல்லா பண்ண முடியும். நீ கண்டிப்பா பெரிய படம் பண்ணுவ என்று நம்பிக்கை அளித்தார். அது எப்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆதிக்கின் பார்வை மாற்றம்:

நாம் வழிகாட்டியாக நினைத்த ஒருவர் நம் மீது இவ்வளவு பெரிய நம்பிக்கையை வைத்து ஊக்குவிக்கிறார் என்பதால் ஆகும். மார்க் ஆண்டனிக்கு முன்பே அவருடன் படம் செய்வது உறுதியாகிவிட்டது. நேர்கொண்ட பார்வை படம் பண்ணும்போது அஜித் சாரை சந்தித்தேன். அவருடன் பழகும் வாய்ப்பு கிட்டியது. சாருடன் பழகிய பிறகுதான் நான் சினிமா பார்க்கும் பார்வை மாறியது. என் வாழ்க்கையை பார்க்கும் பார்வை மாறியது. மார்க் ஆண்டனி பண்றதுக்கு முக்கிய காரணமே நேர்கொண்ட பார்வை என் வாழ்க்கையை மாற்றியதே ஆகும்.

நான் எப்போது எல்லாம் மிகவும் சோர்வாக உணர்கிறேனோ அப்போது எல்லாம் அஜித்சாரின் நேர்காணல்தான் பார்ப்பேன். நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ள அது உதவியது.

இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தை கேங்ஸ்டர் படமாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாற்றம் தந்த மார்க் ஆண்டனி

ஆதிக் ரவிச்சந்திரன் முதன்முதலில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. அடுத்து அவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் படுதோல்வியை அடைந்தது. இதையடுத்து, அவருக்கு அஜித்துடன் இணைந்து எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த படத்திற்கு பிறகு அவர் இயக்கிய பகீரா பெரிய வெற்றி பெறாவிட்டாலும், அதே ஆண்டு இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகிறது. இந்த படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.