ARTICLE AD BOX
சென்சூரியன்: சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் என்னதான் சாதனை படைத்தாலும், 90ஸ் கிட்ஸ்களுக்கு பழைய கிரிக்கெட் வீரர்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்தாலே தனி உற்சாகம் பிறந்து விடும். அந்த வகையில் 80, 90 கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் லெஜென்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் பங்கேற்க ஏ பி டிவில்லியர்ஸ் முடிவெடுத்தார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான டிவில்லியர்ஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த சூழலில் நான்காண்டுகள் டிவில்லியர்ஸ் எந்தவித போட்டியிலும் பங்கேற்கவில்லை.

அப்போதுதான் தனது குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப வேண்டும் என்ற வேட்கை உருவாகி இருப்பதாக டிவில்லியர்ஸ் கூறியிருந்தார். இதற்காக பயிற்சியில் டிவில்லியர்ஸ் தயாராகி வந்த நிலையில், தற்போது தென்னாபிரிக்காவில் லெஜெண்ட்ஸ் டி20 என்ற தொடர் நடைபெற்று வருகிறது.
அதில் தென்னாபிரிக்காவில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில் டைட்டன்ஸ் அணி சார்பாக டிவில்லியர்ஸ் பங்கேற்றார். புல்ஸ் அணி எதிரான போட்டியில் களமிறங்கிய டிவில்லியர்ஸ் ஆரம்பம் முதலே பட்டையைக் கிளப்பினார். டிவில்லியர்ஸ் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் அடித்த அனைத்து பந்துமே சிக்ஸராக சென்றது.
15 சிக்ஸர்கள் விளாசிய டிவில்லியர்ஸ், இரண்டு பந்துகளை மட்டுமே வீணடித்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ் அதிவேகமாக சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய புல்ஸ் அணி 14 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து இருந்தபோது போட்டி மழையால் தடைப்பட்டது.
இதன் மூலம் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணிக்காக 16 ஆண்டுகள் விளையாடிய டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 19864 ரன்கள் அடித்திருக்கிறார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை தற்போது வரை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.