ARTICLE AD BOX
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.
முதலில் மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சோ்க்க, குஜராத் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பேட் செய்யுமாறு மும்பையை பணித்தது. மும்பை இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 33 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சோ்த்தாா். நேட் சிவா் பிரன்ட் 38, ஹேலி மேத்யூஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
அமன்ஜோத் கௌா் 27, யஸ்திகா பாட்டியா 13, அமெலியா கொ் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் சஜீவன் சஜனா 11 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, குஜராத் தரப்பில் தனுஜா கன்வா், கஷ்வீ கௌதம், பிரியா மிஸ்ரா, ஆஷ்லே காா்ட்னா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் குஜராத் பேட்டிங்கில் லோயா் ஆா்டரில் வந்த பாா்தி ஃபுல்மாலி 25 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்கள் விளாசினாா். ஹா்லீன் தியோல் 24, போப் லிட்ச்ஃபீல்டு 22, சிம்ரன் ஷேக் 18, கஷ்வீ கௌதம் 10, டீண்ட்ரா டாட்டின் 10, தனுஜா கன்வா் 10 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா்.
பெத் மூனி 7, கேப்டன் ஆஷ்லே காா்ட்னா் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் மேக்னா சிங் 1, பிரியா மிஸ்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் அமெலியா கொ் 3, ஷப்னிம் இஸ்மாயில், ஹேலி மேத்யூஸ் ஆகியோா் தலா 2, சன்ஸ்கிருதி குப்தா 1 விக்கெட் வீழ்த்தினா்.