ARTICLE AD BOX
90 சதவீத அதிமுக தொண்டர்களின் மன ஓட்டத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து கேள்வி எழுப்பப்ட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தனிப்பட்ட காரணங்கள் காரணமாக செங்கோட்டையன் பதவியில் இல்லாமல் இருந்தார். பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கிய போது அமைச்சர் ஆனார். அம்மாவின் கட்சி பலவீனமாகி வருவதால் அங்குள்ள 90 சதவீத தொண்டர்களும் நிர்வாகிகளும் இயக்கம் வலுப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் செங்கோட்டையன் மூலம் வெளிப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்.
கேள்வி:- செங்கோட்டையன் அநாகரீகமாக நடந்து கொள்வதாக வைகை செல்வன் கூறி உள்ளாரே?
நாகரீகம், அநாகரீகம் பற்றியெல்லாம் அண்ணன் செங்கோட்டையனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம். அவர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர். 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சியில்தான் பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதா அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அத்திட்டத்திற்கு பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தபோது, அதில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் இருந்தது. அது செங்கோட்டையனுக்கு வருத்தம் தந்தது. செங்கோட்டையனை தூண்டிவிடுவதற்காக நான் பேசவில்லை. செங்கோட்டையன் எதற்காக வருத்தப்பட்டாரோ, அது அனைவரின் வருத்தமும் கூட. அதிமுகவில் உள்ள 90 சதவீதம்பேரின் மன ஓட்டத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஒன்றும் மக்களிடம் ஓட்டுக்கேட்டு முதலமைச்சர் ஆனவர் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் ’லாட்டரி யோகம்’ அடித்ததுபோல் வந்தவர். முதல்வராக்கியவர்களுக்கு துரோகம், ஆட்சி தொடர காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம், ஆட்சியை பாதுகாத்து தந்த பாஜகவுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. தன் மீது வழக்குகள் வந்துவிடக் கூடாது என்று திமுகவுக்கு பயந்து கொண்டு இரட்டை இலையை திமுக வெற்றிக்கு மறைமுகமாக பயன்படுத்தி வருகிறார். பாஜக உடன் கூட்டணியே கிடையாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, இப்போது ஏன் மாறுகிறார். செங்கோட்டையன் பின்னணியில் பாஜக இருக்க வேண்டிய அவசியமில்லை.
கேள்வி:- திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி உள்ளது
திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யபடுகிறது. இது ஆளுங்கட்சியின் ஆசி உடன் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்து உள்ளது. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என திமுகவினர் சொன்னார்கள். ஆனால் அதுபற்றி இப்போது வாய் திறப்பதே இல்லை. நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் சொல்லாத ஒன்றை சொன்னதாக திமுக எம்.பிக்கள் கூறுகிறார்கள். திசை திருப்பும் நாடகம் திமுக ஆட்சியில் நடக்கிறது.
