ARTICLE AD BOX
சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் என்ற கிரிக்கெட் தொடரானது முதல் சீசனாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய 6 நாடுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன், ஜாண்டி ரோட்ஸ், கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் முதலிய பல்வேறும் சாம்பியன் வீரர்கள் விளையாடிவருகின்றனர்.
பரபரப்பாக நடந்துவரும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டியை எட்டியுள்ளன. இதில் முதல் அரையிறுதிப்போட்டியானது சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை 94 ரன்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா மாஸ்டர்ஸ் அணி.
இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டியானது குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும், லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கும் நடைபெற்றது.
இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 179 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ராம்டின் 50 ரன்களும், பிரையன் லாரா 41 ரன்களும் அடித்தனர்.
180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி, 20 ஓவரில் 173 ரன்கள் மட்டுமே அடித்து 6 ரன்களில் தோல்வியை தழுவியது. இறுதிவரை 66 ரன்கள் அடித்து போராடிய குணரத்னேவால் கடைசி 4 பந்துகளில் 7 ரன்களை அடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் 6 ரன்னில் த்ரில் வெற்றிபெற்ற லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி, சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணியை நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை எதிர்த்து விளையாடுகிறது.