ARTICLE AD BOX
6 ஆண்டுகளில் 3,000% லாபம்.. முதலீட்டாளர்களை செல்வந்தர்களாக்கிய பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ்!!
பங்குச் சந்தையில் சிறிய முதலீட்டில் பெரிய ஆதாயத்தை பெறலாம் அல்லது குறுகிய காலத்திற்குள் அபரிமிதமான வருமானத்தை பெறலாம் என்ற எண்ணத்தில்தான் பல முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வருகின்றனர். அசாரண வருமானத்தை தரும் ஒரு மல்டிபேக்கர் பங்கை கண்டுபிடித்து அதில் முதலீடு செய்தால் மேலே சொன்னது சாத்தியம்தான்.
அப்படியொரு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்த பங்குதான் பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். ஜவுளித்துறையை சேர்ந்த இந்நிறுவனம் ஆடைகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நிபுணத்துவம் பெற்றது.

வங்கதேசம், இந்தியா,வியட்நாம்,இந்தோனேசியா மற்றும் கவுதமாலாவில் முழுவதும் பன்முகப்படுத்தப்பட்ட உற்பத்தி ஆலைகளை கொண்ட பட்டியலிடப்பட்ட இந்தியாவை சேர்ந்த ரெடிமேட் கார்மென்ட் உற்பத்தியாளர் இந்நிறுவனம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டி வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி, இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.953.67 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.28.24 கோடி ஈட்டியுள்ளது.
நீண்ட கால அடிப்படையில் பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளன. 6 ஆண்டுகளுக்கு முன் பங்குச் சந்தையில் இப்பங்கு ரூ.47 என்ற அளவில் வர்த்தகமாகியது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் முடியும் போது இப்பங்கின் விலை ரூ.1,435 என்ற அளவில் இருந்தது. ஆக, கடந்த 6 ஆண்டுகளில் இப்பங்கின் விலை சுமார் 3,000 சதவீதம் உயர்ந்துள்ளது. 6 வருடத்துக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அது இன்று ரூ.31 லட்சமாக பெருகியிருக்கும்.
2019ல் இந்நிறுவன பங்கு 15 சதவீதம் ஆதாயம் அளித்தது. 2020ல் இப்பங்கின் விலை 29 சதவீதம் உயர்ந்தது. 2021ல் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 74 சதவீதம் ஆதாயம் கொடுத்தது. 2022ம் ஆண்டில் இப்பங்கு 17 சதவீதம் முன்னேற்றம் கண்டது. 2023ல் இப்பங்கின் விலை 217 சதவீதம் வளர்ச்சி கண்டது.
அதேசமயம் ஒட்டு மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பண மதிப்பை 2,291 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இப்பங்கின் விலை ரூ.60 என்ற அளவில் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.31 சதவீதம் உயர்ந்து ரூ.1,451.35ஆக இருந்தது.
Story written by: Subramanian