ARTICLE AD BOX
துபாய்,
துபாய் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 5 ஆயிரத்து 800 டன் நிவாரண பொருட்கள் அடங்கிய பிரமாண்ட 6-வது சிறப்பு கப்பல் எகிப்து அல் அரீஷ் துறைமுகத்தை அடைந்துள்ளது. இதனை காசாவுக்கு எடுத்து சென்று விரைவாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமீரக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் இஸ்ரேல் நாட்டின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் போர் நிறுத்தம் காரணமாக தற்போது அமைதி நிலை திரும்பி உள்ளது. போர் நின்றாலும் இன்னும் பெரும்பாலோர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ஏற்கனவே கேலன்ட் நைட் 3 திட்டத்தின் கீழ் அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சிறப்பு விமானங்களில் உதவிகள் அனுப்பி வைக்கப்படுவது தொடர்கிறது. இந்த நிலையில் தற்போது சிவர்ல்ரஸ் நைட் 3 என்ற திட்டத்தின் கீழ் துபாயின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி 5 ஆயிரத்து 800 டன் நிவாரண பொருட்கள் பிரமாண்டமான 6-வது சிறப்பு கப்பல் மூலம் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கப்பலில் அனைத்து நிவாரண பொருட்களும் அமீரகத்தின் தேசத்தாய் என போற்றப்படுபவரும், பொது பெண்கள் சங்கத்தின் தலைவரும், தாய்மை மற்றும் குழந்தைக்கான சுப்ரீம் கவுன்சில் தலைவருமான ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் சார்பில் அனுப்பட்டுள்ளது. எனவே இந்த கப்பல் 'பாலஸ்தீன மக்களுக்கு அமீரக தேசத்தாயின் அன்பு பரிசு' என தலைப்பிடப்பட்டு சென்றது.
இந்த கப்பலின் உள்ளே பாலஸ்தீன மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள், பெண்களுக்கான சுகாதார பொருட்கள், உடைகள், குளிர்காலத்தில் அணியும் சுவட்டர்கள், சிறுவர், சிறுமிகளுக்கான பொருட்கள், போர்வைகள், தங்குவதற்கான முகாம்கள் அமைப்பதற்கான பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது இந்த 6-வது சிறப்பு கப்பல் எகிப்து நாட்டின் அல் அரீஷ் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. இந்த கப்பலை அமீரக ராஜாங்க மந்திரி டாக்டர் மைதா பிந்த் சலெம் அல் ஷம்சி, அமீரக செம்பிறை சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஷித் முபாரக் அல் மன்சூரி, வடக்கு சினாய் மாகாண கவர்னர் ஆக்டர் காலித் மெகாவர் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் அமீரக செம்பிறை சங்கத்தின் ஒத்துழைப்புடன் தேவைப்படும் பாலஸ்தீன மக்களுக்கு அல் அரீஷ் துறைமுகத்தில் இருந்து காசாவுக்கு எடுத்து சென்று விரைவாக வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து அனைத்துவிதமான மனிதாபிமான உதவிகளையும் வழங்க அமீரக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.