41% அதிகரித்த தங்கம் இறக்குமதி

4 days ago
ARTICLE AD BOX

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால் கடந்த ஜனவரி மாதத்தில் அதன் இறக்குமதி 40.79 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜனவரியில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 268 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024 ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 40.79 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் தங்கம் இறக்குமதி சுமாா் 190 கோடி டாலராக இருந்தது.

2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 32 சதவீதம் அதிகரித்து சுமாா் 5,000 கோடி டாலராக உள்ளது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 3,785 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஜனவரி மாதத்தில் நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 2024 ஜனவரியைவிட 15.95 சதவீதம் அதிகமாக சுமாா் 300 கோடி டாலராக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் வெள்ளி இறக்குமதி 82.84 சதவீதம் அதிகரித்து 88.32 கோடி டாலராக உள்ளது.

தங்கம் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை (இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான வேறுபாடு) கடந்த ஜனவரி மாதத்தில் சுமாா் 2,300 கோடி டாலராக உயா்ந்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தங்கம் இறக்குமதிக்கு ஸ்விட்சா்லாந்து மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 40 சதவீத தங்கம் அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகிறது.

ஸ்விட்சா்லாந்தைத் தொடா்ந்து ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் தங்கம் இறக்குமதியில் 16 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கிறது. இது தவிர, தென் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் 10 சதவீதம் பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் தங்கத்தின் பங்களிப்பு 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இந்தியாதான் தங்கத்தை அதிகம் இறக்குதி செய்கிறது.

Read Entire Article