ARTICLE AD BOX
இஸ்ரேலில் இருந்து கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மேலும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை வியாழக்கிழமை (பிப். 27) திரும்ப ஒப்படைக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒப்படைக்கப்படும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களுக்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனா்கள் விடுதலை செய்யப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னா் தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் படையினா் கடந்த வாரம் ஒப்படைந்தனா் (படம்).
இஸ்ரேலும் ஹமாஸும் காஸாவில் கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் கடைப்பிடித்துவரும் போா் நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவுக்கு வருகிறது.
இந்தச் சூழலிலும், கைதிகள் மற்றும் பிணைக் கைதிகளின் சடலங்களைப் பரிமாறிக்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளது அடுத்தகட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, 33 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் விடுவித்துவிட்டனா். இருந்தாலும், தாங்கள் கடைசியாக விடுவிக்க வேண்டிய சுமாா் 300 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.