ARTICLE AD BOX
காசா முனை:
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஜனவரி மாதம் போர்நிறுத்தம் தொடங்கியது. மூன்று கட்டமாக அமல்படுத்தப்படும் போர்நிறுத்தத் திட்டம் தற்போது முதல் கட்டத்தில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பணயக் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டு ஒப்படைக்கப்படுகின்றனர்.
போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை பாலஸ்தீனியர்கள் 1,133 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் இறந்துபோன 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. ஷிரி பிபஸ் என்ற பெண், அவரது குழந்தைகள் ஏரியல், கிபிர் மற்றும் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் ஓடட் லிப்ஷிட்ஸ் (வயது 83) ஆகியோரின் உடல்கள் இன்று ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் வைத்து, 4 பேரின் உடல்களும் சர்வதேச செஞ்சிலுவை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டபோது குழந்தை ஏரியலின் வயது 4, கிபிர் 9 மாத கைக்குழந்தை. இந்த குழந்தை ஹமாஸ் பிடியில் இருந்த மிக குறைந்த வயது பணயக் கைதி என்பது குறிப்பிடத்தக்கது-
அவர்களின் உடல்கள் ஒப்படைப்பு குறித்த தகவலை மிகவும் வேதனையுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
அதில், 'இது இஸ்ரேல் அரசுக்கு மிகவும் கடினமான, ஒரு கொந்தளிப்பான, ஒரு துக்க நாளாக இருக்கும். வீழ்ந்த எங்கள் அன்பிற்குரிய நான்கு பணயக்கைதிகளை தாயகத்திற்கு கொண்டு வருகிறோம். எனது இதயமும் முழு நாட்டின் இதயமும் கிழிந்துள்ளது. முழு உலகின் இதயமும் கிழிந்திருக்க வேண்டும், ஏனென்றால் இங்கு நாம் யாருடன், எதைக் கையாள்கிறோம், எப்படிப்பட்ட அரக்கர்களை சமாளிக்கிறோம் என்பதைப் பார்க்கவேண்டும். மிகவும் வேதனையாக உள்ளது. ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் அவலநிலையின் அடையாளமாக பிபஸ் குடும்பம் மாறியிருந்தது. போரின்போது அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. பின்னர், இஸ்ரேலிய தாக்குதலின்போது அந்த குடும்பம் இறந்ததாக ஹமாஸ் அமைப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.